பதிவேடுகளின் வகைகள் மற்றும் அவற்றைப் பராமரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பதிவேடுகள்

ஒரு தனிப்பட்ட குழந்தையின் கல்வித் தேவையைத் திட்டமிடுவதிலும் அவர்கள் நடத்தையை வழிப்படுத்துவதிலும் பதிவேடுகள் முக்கிய பங்காற்றுகிறது. முன்பள்ளிக் கல்வி முறைகள், அதன் விளைவுகளை மதிப்பிடவும், பள்ளியை மேலும் புதிய உத்திகளைக் கையாண்டு மேன்மையுறச் செய்வதற்கும் பதிவேடுகள் உதவுகின்றன. முன்பள்ளியில் பதிவேடுகள் ஒரு முக்கிய கருவியாகவும் உள்ளதால் முன்பள்ளி சிறப்பாக செயல்பட உதவுகிறது. பதிவேடுகள் அதன் நிரந்தர தன்மைக்காக பெரிதும் மதிப்பிடப்படுகிறது. முன்பள்ளியில் தற்போது முக்கியமானவையாகக் கருதப்படுபவை எதிர்காலத்திற்கும் மிக்க பயனுள்ளவையாக இருக்க வேண்டுமெனில் அவை பதிவு செய்யப்படுதல் அவசியம். கீழ்க்கண்ட பயன்கள் உள்ளதால் பலவிதமான பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.

பதிவேட்டின் பயன்கள்

முன்பள்ளி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி ஒருவர் அறிவதற்குப் பதிவேடுகள் பெரிதும் உதவுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சி முறைகளை அறியவும், தனிப்பட்ட குழந்தைகளை நன்றாகப் புரிந்து கொள்ளவும் பதிவேடுகள் உதவுகிறது.

குழந்தை நடத்தைப் பிரச்சனைகளைப் பற்றியும், சராசரி குழந்தைகளைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கு அனைத்து விவரங்களும் அடங்கிய கூட்டுப் பதிவேடு (cumulative record) உதவுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தை வெளியிடங்களில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அறியவும் முடிகிறது.

ஆசிரியர்களால் பராமரிக்கப்படும் கூர்ந்து நோக்கும் பதிவேட்டின் மூலம் குறிப்பிட்ட குழந்தைகளிடம் உள்ள நடத்தைப் பிரச்சனைகள் பற்றி அறிவதால் அக்குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. எடுத்துக்காட்டாக, பகைமைத்தன்மை அதிகமுள்ள குழந்தை அதனை பொம்மையை அடிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள் எதற்கு தகுதியானவர்கள் என்பதைப் பதிவேட்டிலுள்ள விவரங்களின்மூலம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் கூட்டுப்பதிவேடு ஒவ்வொரு குழந்தைக்கும் பராமரிக்கப்படுவதால் அக்குழந்தையின் திறமைகள், பலவீனங்கள், செயல்கள் பற்றி அறிய முடிகிறது.

முன்பள்ளியிலுள்ள பதிவேடுகளின் மூலம் ஆசிரியர்கள் குழந்தைகளின் சில கல்வி சம்பந்தமான நடத்தையைப் பற்றி முன் கணித்துக் கூற இயலும்.

பதிவேடுகள் பாடத்திட்டத்தை அமைப்பதற்கு ஆசிரியர்களுக்கு உதவுகிறது: குழந்தைகளின் ஈடுபாடு அல்லது பங்கு ஒவ்வொரு செயலிலும் எவ்வாறு உள்ளது என்பதைப் பதிவேட்டின் மூலம் பதிவு செய்வதால் குழந்தைகளால் எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என ஆசிரியர்களால் கணித்துச் சொல்ல முடியும். அதற்கேற்றபடி பாடத்திட்டத்தை அமைக்கவும் முடியும்.

பதிவேடுகள் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சியளிக்கிறது : குழந்தைகளுடன் இருக்கும் போது ஆசிரியர்கள் தொடர்ந்து கற்கிறார்கள். ஆசிரியர்கள் பலவிதமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி அவற்றின் (பயனை) முடிவினைப் பதிவு செய்து வைக்கலாம். மதிப்பிடுதல் முன் பள்ளியின் திட்டங்களையும் செயல்களையும் மதிப்பீடு செய்வதற்கு பதிவேடுகள் உதவுகிறது. ஆராய்ச்சிகளுக்கு வேண்டிய விவரங்களை பதிவேடு அளிக்கிறது. முன்பள்ளி என்பது மனித உறவுகளைப் பற்றிக் கூறும் ஒரு சோதனைக் கூடமாகும். மனித வளர்ச்சி மற்றும் மனித உறவுகள் பற்றிய விவரங்களை ஆசிரியர்களால் வைக்கப்படும் பதிவேட்டின் மூலம் அறியலாம். முன்பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் முன்பள்ளியிலிருக்கக் கூடிய பலவகைப் பதிவேடுகள் மற்றும் குறிப்புப் புத்தகங்கள் கீழ்வருவன ஆகும்.

சேர்க்கைப் பதிவேடு

இப்பதிவேட்டின் மூலம் பள்ளியிலுள்ள அனைத்துக் குழந்தைகளின் எண்ணிக்கை, பள்ளியில் சேர்ந்த நாள், வயது, பாலினம், போன்றவற்றை அறிய முடியும். மேலும் குழந்தையின் குடும்பத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களான பெற்றோர் பெயர், முகவரி, மதம், சாதி, வேலை, வருமானம், குடும்பத்திலுள்ள மற்ற குழந்தைகளின் எண்ணிக்கை போன்றவற்றை அறியலாம்.

வருகைப் பதிவேடு

வருகைப் பதிவேடு ஆசிரியருக்கெனவும், மாணவர்களுக்காகவும் தனித்தனியாக உள்ளது. இப்பதிவேட்டின் மூலம் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, மேலும் அக்குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வருகிறார்களா என்றும், பள்ளியை விட்டு நின்ற குழந்தைகள் பற்றிய விவரம் போன்றவற்றையும் வருகைப் பதிவேட்டின் மூலம் அறியலாம். மேலும் இப்பதிவேட்டின் மூலம் பள்ளிக்கு வருவதால் ஏற்படும் பயனாளிகள் பற்றிய விவரம் அறியலாம். சில முன் பள்ளிகளில் மதிய உணவு உண்போருக்கென தனிப்பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

தினசரி செயல்களுக்கான பதிவேடு

இப்பதிவேட்டின் மூலம் தினசரி முன்பள்ளியில் நடைபெறும் செயல்களைப் பற்றி அறிய முடியும். இதன் மூலம் ஆசிரியர்கள் எந்தெந்த (நிகழ்ச்சிகள்) செயல்களை புதுமாதிரியான செயல்களாக மாற்றலாம் என்பதை முடிவெடுக்க உதவுகிறது.

இருப்புப் பதிவேடு

இருப்புப் பதிவேடு 3 வகைப்படும். அவையாவன, முதல் வகையில் நிரந்தரப் பொருட்களான மேசை, நாற்காலி, பீரோ போன்றவை. இரண்டாம் வகையில் பகுதி நிரந்தரப் பொருட்களான பாய், பக்கெட், மற்றும் சுத்தம் செய்யும் கருவிகள். மூன்றாம் வகையில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களான வண்ணப் பொடிகள், மெழுகு பென்சில்கள், சாக்குகட்டிகள் போன்றவை. இப்பதிவேடு மொத்தப் பொருள்களின் எண்ணிக்கை, அவற்றின் விலை, வாங்கப்பட்ட இடம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களையும் பரிசோதித்துப்பார்ப்பவர்களுக்கு அளிக்கும்.

மேலும் இப்பதிவேடு ஆசிரியர்களுக்கு மாற்றப்பட வேண்டிய பொருட்கள், சரிசெய்யப்பட வேண்டிய பொருட்கள், தேவையற்ற பொருட்கள் பற்றியும் அறிய உதவுகிறது.

ஆரோக்கியப் பதிவேடு

இப்பதிவேட்டில் ஒவ்வொரு குழந்தைக்கென தனித்தனித்தாள்கள் உள்ளன. இவற்றில் குழந்தைகளைப் பற்றிய ஆரோக்கிய குறிப்புக்கள் அடங்கும். குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்கள், தடுப்பூசிகள் போடப்பட்ட விவரம், ஒவ்வொரு மாதத்திலும் எடை அதிகரித்துள்ளதா போன்ற விவரங்கள் இப்பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும். இப்பதிவேட்டின் மூலம் முன்பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் சத்துணவு நிலையையும் அளவிட முடிகிறது.

கூட்டு அறிக்கைப் பதிவேடு

ஒவ்வொரு குழந்தைக்கென தனித்தனி உறைகளில் குழந்தையின் உடல், உள, அறிவு, சமூக மனவெழுச்சி வளர்ச்சி பற்றி வரிசைக் கிரமமாகக் குறிக்கப்பட்டிருக்கும். முன் பள்ளியினால் குழந்தைகள் எந்தளவு பயனடைந்துள்ளனர், எந்த பகுதியில் அவர்களின் முன்னேற்றம் அதிகமாக உள்ளது என்றும், இன்னும் எந்த பகுதியில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது எனவும் அறிவதற்கு இந்தப் பதிவேடு பேருதவியாக உள்ளது.

பெற்றோர் கூட்ட அறிக்கைப் பதிவேடு

பெற்றோர் சங்கக் கூட்டம் மற்றும் பாலர் பள்ளியின் செயல்களில் பெற்றோரின் பங்கேற்பு பற்றி இப்பதிவேட்டின் மூலம் அறியலாம். பள்ளியில் நடைபெறும் பல்வேறு செயல்களில் பெற்றோர்கள் எதில் பங்கேற்கிறார்கள், எந்த விதத்தில் ஈடுபடுகிறார்கள் மற்றும் எந்த அளவு அதிகமான விகிதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் இப்பதிவேட்டின் மூலம் அறியலாம்.

மற்ற பதிவேடுகள்

இவற்றைத் தவிர பெற்றோர் ஆசிரியர் சங்கம் பற்றியும், ஆசிரியர்கள் குழந்தைகளின் இல்லம் சென்று பார்வையிடல் பற்றியும், பள்ளிப் பணி ஆய்வு பற்றியும், பார்வையாளர் குறிப்புகள், தினசரி பாடத்திட்டம், போன்ற அனைத்தைப் பற்றியும் பதிவேடுகள் தனித்தனியாக முன்பள்ளியில் பராமரிக்கப்படுகிறது.

தனிப்பட்ட குழந்தையைப் பற்றிய பதிவேடு

ஆசிரியர் குழந்தையின் வளர்ச்சியைப் பல்வேறு கோணங்களில் குறிப்பிடுகிறார். உணர்வுபூர்வமான வளர்ச்சி, தனிப்பட்ட, சமுதாய, மொழி மற்றும் அறிவு வளர்ச்சி, அவற்றோடு ஆசிரியர் குழந்தையின் தனிப்பட்ட விருப்பங்கள், திறமைகள் ஆகியவற்றில் குறுக்கிடும் காரணிகளை சோதித்து மதிப்பிடப்படுவார்கள். மேலும் அவனுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் ஆசிரியர் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட குழந்தையின் வளர்ச்சிநிலையை அல்லது குறிப்பிட்ட தேவையான உதவியை வெளிப்படுத்தும் அந்தக் குழந்தையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆசிரியருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இவ்வாறாக பதிவேடுகள் முன்பள்ளிக் கல்வியை திட்டமிடுவதிலும் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் உதவுகின்றன. பெற்றோர்களுக்கு குழந்தையின் நடவடிக்கைகளைப் பற்றியும், பள்ளியில் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றித் தெரிவிப்பதற்கும் பதிவேடுகள் அவசியமாகின்றன. குழந்தைகளைப் பற்றி ஆசிரியர் நன்றாகப் புரிந்துக் கொள்வதற்கும் அவருக்குப்பின் பணிக்கு வரும் ஆசிரியர்கள் குழந்தைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் பதிவேடுகள் முன்பள்ளியில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.