புத்தகங்களின் முக்கியத்துவம் எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.. நம் அறிவை பெருக்கிக் கொள்ள உதவும் புத்தகங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. நூல் படிக்கும் பழக்கம் பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற நல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார். நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே. எது சிறந்த புத்தகம்? பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே. படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். நூலகங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம். தமது துறைநூல்கள் உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில் உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும். நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும். வாழ்வை முன்னேற்றும் வளமான நூல்கள் மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும். நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே. தன்னம்பிக்கையை வளர்க்கும் தரமான நூல்கள் இதோ. அப்துற்றகீமின் “வாழ்க்கையில் வெற்றி” அகிலனின் “வாழ்க்கையில் வெற்றி” வ.உ.சி.யின் “மனம் போல் வாழ்வு” மு. வரதராசனாரின் “நல்வாழ்வு” விடுதலை கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுரைகள்” இல.செ. கந்தசாமியின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்” எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ணங்கள்” பி.சி. கணேசனின் “உங்களால் முடியும்” மெர்வினின் “வாழ்க்கை உன் கையில்” பெரு. மதியழகனின் “நினைவாற்றல் மேம்பட வழி” ஆகியவை படிக்கப் படிக்க உங்களை வெற்றிக்கு ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தவை. இங்கே குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான சிறந்த நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். குறைந்தது இவற்றையாவது படிப்பது போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும். படிப்பதும் தியானமே புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை. ஆதாரம் : கல்விச்சோலை