வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் [Department of Science and Technology (DST)] கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் (Vigyan Prasar) மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் [National Council of Educational Research and Training (NCERT)] ஆகியவற்றுடன் இணைந்து விஞ்ஞான பாரதி [Vijnana Bharati (VIBHA)] அமைப்பு வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் [Vidyarthi Vigyan Manthan (VVM)] என்னும் தேசிய அளவிலான திறந்த புத்தகத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடச் செய்யவும் இந்தத் தேர்வு வழிவகுக்கும். இளம் விஞ்ஞானிகளைக் கண்டறியும் நோக்கில் நடத்தப்படும் இத்தேர்வை மாணவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் ஆன்லைனில் தமிழ், ஆங்கிலம் அல்லது பிற பிராந்திய மொழிகளிலும் எழுதலாம். இந்தத் தேர்வில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் இணையதளத்தில் அக்டோபர் 31 வரை ரூ. 100 செலுத்தி தனியாகவோ அல்லது பள்ளி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறும் இத்தேர்வு இரு பிரிவுகளில் நடத்தப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர். மாணவர்கள் இத்தேர்வைப் பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக நவம்பர் 1 முதல் மாதிரித் தேர்வுகள் நடைபெறும். நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெறும் இறுதித் தேர்வில் ஏதாவது ஒரு தேதியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதலாம். மொத்தம் 100 கேள்விகளுக்கு 90 நிமிடங்களில் விடை அளிக்க வேண்டும். பரிசுகள் நிலை 1 பள்ளி அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு மின் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் பங்கேற்க வேண்டும். நிலை 2 மாவட்ட அளவில் ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மின் சான்றிதழ்கள் வழங்கப்படும். நிலை 3 மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மாநில அளவில் நடக்கும் முகாமில் கலந்து கொள்வார்கள். இந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்பவர்களில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து முறையே ரூ. 5000, ரூ. 3000 மற்றும் ரூ. 2000 பரிசாக வழங்கப்படும். நிலை 4 மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமில் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கு (ஹிமாலயன்ஸ்) முறையே ரூ. 25000, ரூ. 15000 மற்றும் ரூ. 10000 பரிசாக வழங்கப்படும். இவர்களுக்கு நாட்டின் தலைசிறந்த தேசிய ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று முதல் மூன்று வாரம் வரை பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், இவர்களுக்கு பாஸ்கரா உதவித்தொகை மாதம் ரூ. 2000 வீதம் ஒரு வருடத்திற்கு அளிக்கப்படும். மண்டல அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 5000, ரூ. 3000 மற்றும் ரூ. 2000 பரிசாக வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு நாட்டின் தலைசிறந்த தேசிய ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று முதல் மூன்று வாரம் வரை பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும். ஆதாரம்: வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்