பிரதமரின் தேசிய சிறார் விருது: திறமையான குழந்தைகளை கவுரவித்தல் பிரதமரின் தேசிய விருது விருது 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் அசாத்திய திறமை, வீரம், படைப்பாற்றல், மன உறுதி ஆகியவற்றை அங்கீகரிக்கும் நாட்டின் முதன்மையான தேசிய விருதாகும். இந்த விருது ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் புதுதில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. வீரம், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்களின் வரலாற்று சிறப்புமிக்க தியாகம், வலிமை ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட வீர சிறுவர்கள் தினமான டிசம்பர் 26 அன்று இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்றைய இளைஞர்களின் சிறப்பை காலத்தால் அழியாத தியாகத்தின் பாரம்பரியத்துடன் மத்திய அரசு இணைக்கிறது. 2019-ல் தொடங்கி இதுவரை 203 குழந்தைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். கல்வியில் மட்டுமன்றி தனிப்பட்ட நடத்தை உள்ளிட்ட பிற செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் குழந்தைகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் குழந்தைகள் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும் ஜூலை 31, 2026 நிலவரப்படி நாட்டின் குடிமக்களாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு பிரிவிலும் முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்களாக இருக்கக்கூடாது. ஜூலை 31, 2026 என்ற தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் சாதனை நிகழ்த்தியிருக்க வேண்டும். எந்தவொரு தனிநபரும், நிறுவனமும் ஒரு குழந்தையை பரிந்துரைக்கலாம். குழந்தைகள் தங்களை தாங்களே சுய பரிந்துரை செய்தும் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இந்த விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை https://awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 31, 2026-க்குள் சமர்ப்பிக்கலாம். முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்களில் சிலரது சாதனைகள் 17 வயதான மாற்றுத்திறனாளி மாணவர் அர்ணவ் அனுபிரியா மகர்ஷி (2025- அறிவியல் தொழில்நுட்பம் பிரிவு) கை முடக்குவாதத்திற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மறுவாழ்வு கருவியை உருவாக்கியதற்காக கவுரவிக்கப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது கரீனா தாபா (2024- வீரம் பிரிவு) மீட்பு நடவடிக்கையின் போது எரிவாயு சிலிண்டரை அகற்றி 36 உயிர்களை காப்பாற்றியதற்காக விருது பெற்றார். 12 வயது சிறுவன் ஆதித்யா விஜய் பிரம்ஹானே ஆற்றில் மூழ்கிய தனது உறவினர்களை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்ததற்காக மரணத்திற்குப் பின் (2024-வீரம் பிரிவு) விருது பெற்றார். ஆறு வயது சிறுவன் அர்மான் உப்ரானி 100 பெருக்கல் கணக்குகளைத் தீர்த்து தேசிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்ததற்காக (2024-கலை கலாச்சாரம் பிரிவு) கவுரவிக்கப்பட்டார். ஒன்பது வயது சிறுவன் அவனிஷ் திவாரி மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக (2024-சமூக சேவை பிரிவு) விருது பெற்றார். விருது பெற்றவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் புதுதில்லிக்குச் சென்று வருவதற்கான பயணச் செலவு, தங்குமிட வசதிகளை மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. இத்தகைய முன்மாதிரியான குழந்தைகளை தேசிய அளவில் அங்கீகரிப்பதன் மூலம் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், மற்றவர்களை வாழ்வில் சிறந்து விளங்க பாடுபடவும் இந்த விருது தூண்டுகோலாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276954®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்