கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் சங்கத்தின் ஆய்வகத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவை' நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1986 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்தொடர்புக்கான தேசிய கவுன்சில் [National Council for Science and Technology Communication (NCSTC)] பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டது. அதை அப்போதைய இந்திய அரசு ஏற்றுக்கொண்டு 1986 ஆம் ஆண்டில் இந்த நாளை தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. முதல் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28, 1987 அன்று கொண்டாடப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தன்று, அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோக்கம் தேசிய அறிவியல் தினத்தை அனுசரிப்பதன் அடிப்படை நோக்கம் அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்த செய்தியை மக்களிடையே பரப்புவதாகும். தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய அறிவியல் திருவிழாக்களில் ஒன்றாக பின்வரும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது: மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய செய்தியைப் பரப்புதல் மனித நலனுக்காக அறிவியல் துறையில் உள்ள அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளைக் காட்சிப்படுத்துதல் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதித்து, அறிவியல் வளர்ச்சிக்கான புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல் நாட்டில் உள்ள அறிவியல் சிந்தனை கொண்ட குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குதல் மக்களை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல் தேசிய அறிவியல் தினம் 2026 இந்த ஆண்டு "அறிவியலில் பெண்கள்: வளர்ச்சியடைந்த பாரதத்தை ஊக்குவித்தல்" என்ற கருபொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ளது. உலக அளவில் இந்தியாவின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்த தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின், குறிப்பாக பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அறிவியலின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்