பல்திறன்

பல்திறன் என்பது ‘ஹோவர்ட் கார்டன்ரின்’ மக்களின் பல்வேறு தனித்திறன்களைப் பற்றி (கணித/ தர்க்க, காட்சி சார்ந்த, இசை ...) கூறும் மனோதத்துவக் கொள்கையின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஏழு வகையான தனித்திறன்கள் உள்ளன. சிலர் ஒன்று அல்லது இரண்டு தனித்திறன்களில் சிறந்து விளங்குவர் மற்றும் சிலர் அனைத்துத் திறன்களையும் சமவிகிதத்தில் பெற்று இருப்பர்.

ஹோவர்ட் கார்டனர் ஏழு தனித்திறன்களைப் பட்டியலிட்டுள்ளார். இது ஒரு தற்காலிகமான பட்டியல்தான். முதல் இரண்டு திறன்கள் பள்ளிகளில் கண்டறியப்படுகிறது; அடுத்த மூன்று கலைகளுடன் தொடர்புடையது; இறுதி இரண்டு திறன்களை தனிமனிதத் திறன்கள் என்று ஹோவர்ட் குறிப்பிடுகிறார்.

பல்திறன்களின் வகைகள் என்ன ?
காட்சி/இடம் சார்ந்த திறன்
இது காட்சியை உள்வாங்கிக் கொள்ளும் திறன். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். தகவல்களை தக்கவைத்துக் கொள்ள அவற்றை மனதில் பிம்பங்களாகவே அவர்கள் பதிவுசெய்துகொள்கின்றனர். வரைபடங்கள், சார்ட்டுகள், படங்கள், வீடியோ மற்றும் திரைப்படங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காண்பார்கள்.

இவர்களின் தனித்திறன்கள்:
புதிர்களை உருவாக்குதல், வாசித்தல், எழுதுதல், கிரா/ப்களையும் வரைபடங்களையும் புரிந்துகொள்ளுதல், திசைகளை அறியும் திறன், தீட்டுதல், வரைதல், உருவக மற்றும் ஒப்புமை காட்சிகளை உருவாக்குதல், காட்சிப்படங்களின் திறனறிதல், பயன்பாட்டுப் பொருட்களை வடிவமைத்தல், பொருத்துதல்

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள்:
மாலுமி, சிற்பி, படம் வரைபவர், கண்டுபிடிப்பாளர், கட்டிடக்கலைஞர், உள் அலங்கரிப்பாளர், மெக்கானிக், பொறியாளர்.
சொல்/வாய்மொழித் திறன்
இது சொற்களையும் மொழியையும் சிறப்பாக கையாளும் திறன். இவ்வகையில் கற்போர் மேம்பட்ட கேட்கும் திறன் பெற்றிருப்பர், சிறந்த பேச்சாளர்களாக விளங்குவர். இவர்களின் சிந்தனை காட்சிகளில் அல்லாமல் சொற்களின் வடிவில் இருக்கும்.

இவர்களின் தனித்திறன்கள்:
கவனித்தல், பேசுதல், எழுதுதல், கதை சொல்லுதல், விவரித்தல், கற்பித்தல், துணுக்குகள் கூறுதல், சொல்லின் பொருள் மற்றும் மொழிபயன்பாடு பற்றி அறிந்திருத்தல், தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளல், மொழிப் பயன்பாட்டை அறிதல்.

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள்:
கவிஞர்கள், நிருபர்கள், எழுத்தாளர், ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல்வாதி, மொழிபெயர்ப்பாளர்.
கணித/ தர்க்கவியல் சார்ந்த திறன்.
இது எண்களையும் செயல்களில் காரண காரியங்களைப் பயன்படுத்தும் திறன். இவ்வகை கற்போர்கள், தர்க்க ரீதியாக சிந்திப்பர். தகவல்களைத் தொடர்புபடுத்தி தொடரமைப்பாக அவற்றை நினைவில் வைத்துக்கொள்வர். இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தினை அறிய பேராவலுடன் இருப்பர்; அதிக கேள்விகள் கேட்பர்; எவற்றையும் பரிசோதனை செய்து பார்க்க விரும்புவர்.

இவர்களின் தனித் திறன்கள்:
பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், தகவல்களை வகைப்படுத்துதல், தனித்த விவரங்களில் உள்ள ஒற்றுமையைக் காணுதல், நீண்ட தொடர்புடைய செய்திகளைப் புரிந்து அடுத்த நிலையை அறிதல், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், இயற்கையின் விநோதங்களை வியந்து கேட்டல், சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காணுதல், வெவ்வேறு விடிவங்களுடன் செயல்முறை செய்தல்.
இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள்:
விஞ்ஞானிகள்,பொறியியலாளர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள், ஆராய்ச்சியாளர்கள், கணக்குபதிவாளர்கள், கணித அறிஞர்கள்
உடல் சார்ந்த / உடலசைவுத் திறன்
இது உடலசைவுகளையும் பொருட்களை லாவகமாக கையாளும் திறன். இவ்வகை கற்போர் தங்கள் எண்ணங்களை அசைவுகள் மூலம் வெளிப்படுத்துவர். கண்-கைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடும் (சான்று. பந்து விளையாட்டு, ஏற்றம் ஏறுதல்) சமநிலைத் தன்மையும் பெற்றிருப்பர். சுற்றுப்புறங்களுடன் இணைந்து செயல்படும்போது தகவல்களை நினைவில் நிறுத்தி பகுத்தாய்வர்.
இவர்களின் தனித்திறன்கள்:
நடனம், உடல் ஒத்திசைவு, விளையாட்டு, நேரடி சாகசம், உடலசைவு மொழிகளைப் பயன்படுத்துதல், கைவினைப் பொருட்கள் செய்தல், நடித்தல், போலச் செய்தல், கைகளைப் பயன்படுத்தி வேலைசெய்தல், உணர்ச்சிகளை உடல் வழியே வெளிப்படுத்துதல்

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள் :
தடகள வீரர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நடனக் கலைஞர், நடிகர்கள், தீயணைப்பு வீரர்கள், கலைஞர்கள்.
இசை/சந்தம் சார்ந்த திறன்
இது இசையமைக்க மற்றும் அதனை ரசிக்கும் திறன். இவ்வகை கற்போர் தங்களின் சிந்தனைகளை இசை மற்றும் ரிதங்களின் வடிவில் கொண்டிருப்பர். தாங்கள் கேட்கும் இசையயை பற்றி உடனடியாக விமர்சிப்பர். பூச்சிகளின் ரீங்காரம், மணியோசை குழாயிலிருந்து ஒழுகும் நீரின் ஓசை போன்ற தங்களின் சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலியை கூர்ந்து கவனிப்பர்.

இவர்களின் தனித்திறன்கள்:
பாடுதல், விசிலடித்தல், இசைக்கருவியை மீட்டுதல், இசையமைத்தல், இசைத்தொனியில் உள்ள வேறுபாடுகளை உணர்தல், மெல்லிசைகளை நினைவில்கொள்ளுதல், பூச்சிகளின் ரீங்காரம் மணியோசை குழாயிலிருந்து ஒழுகும் நீரின் ஓசை … போன்ற சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலியின் அமைப்பு மற்றும் சந்தநயங்களை உணர்தல்.

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள்:
இசைக் கருவி வாசிப்பாளர், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், டிஸ்க் ஜாக்கிகள்
பிறருடன் இணைந்து செயல்படும் திறன்
இது அடுத்தவர்களைப் புரிந்துகொள்ளும் திறன். பிறர் ஒரு விஷயத்தை பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதை அறிய அதை அடுத்தவர் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பர் பிறரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் எளிதில் அறியும் அபார ஆற்றல் கொண்டவர்கள். சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள் எனினும் சில நேரங்களில் சிலருக்கு சாதகமாக செயல்படக்கூடியவர்கள். குழுக்களில் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுவர். வார்த்தைகளுடனும் வார்த்தை இல்லாமலும் தகவல் பறிமாறி பிறரிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்.
இவர்களின் தனித்திறன்கள்:
ஒரு விஷயத்தை அடுத்தவர் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் திறன் (இரட்டைக் கண்ணோட்டம்), கவனித்தல், பிறரின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனைகளை அறியும் திறன். கருத்துரை வழங்குதல், குழுக்களுடன் இணைந்து செயல்படுதல், மக்களின் மன நிலையை அறிதல், ஊக்கப்படுத்துதல், வார்த்தைகளுடனும் வார்த்தை இல்லாமலும் தகவல்பறிமாறுதல், நம்பிக்கையை உருவாக்குதல், அமைதியான வழியில் பிரச்சணைகளுக்கு தீர்வுகாணுதல், மக்களுடன் நேர்மறையான உறவு முறையைப் பேணுதல்.

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள்:
கருத்துரை வழங்குபவர், விற்பனைப்யாளர், அரசியல்வாதி, வியாபாரம் செய்பவர்.
சுயதிறமையை உணரும் திறன்
இது தன் சுயமரியாதையையும் சுயத்தையும் அறியும் திறன். இவ்வகை கற்போர் தங்கள் உள்ளுணர்வுகள், கனவுகள், பிறருடன் தங்களுக்குள்ள தொடர்பு, தங்களின் பலம் பலவீனங்களை அறிய முற்படுவர்.

இவர்களின் தனித்திறன்கள் :
தங்களின் பலம் பலவீனங்களை அறிதல், தங்களைப் பற்றிய பகுத்தாய்வு, உள்ளுணர்வுகளை அறிதல், ஆசைகள் மற்றும் கனவுகள், தன் சிந்தனைகளை மதிப்பிடுதல், பிறருடன் உள்ள தொடர்பில் தங்களுக்குள்ள பங்கினை அறிதல்.

இவர்கள் விரும்பும் வாழ்க்கைத் தொழில்கள் :
ஆராய்ச்சியாளர்கள், கொள்கைவாதிகள், தத்துவஞானிகள்

இன்னும் சில திறன்கள் உள்ளனவா?

1983 ஆம் ஆண்டு 'பிரேம்ஸ் ஆப் மைண்ட்' என்ற தொகுப்பில் பல்வகைத் திறன்களின் பட்டியலை ஹோவர்ட் வெளியிட்ட நாள் முதல் அந்த பட்டியலில் புதிதாக சில திறன்களைச் சேர்க்க (அல்லது நீக்க) வேண்டியுள்ளது என்ற விவாதம் எழுந்த வண்ணம் உள்ளது. பல்வேறு ஆய்வுக்குப் பின்னர் ஹோவர்ட் மற்றும் அவரது குழுவினர் பின்வரும் மூன்று திறன்களைப் பரிசீலிக்க உள்ளனர். இயல்பான/இயற்கையான திறன், ஆன்மீகத்திறன் மற்றும் நிலைஇருப்புத் திறன்.

இயல்பான திறன் : இத்திறன் மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் வகைப்படுத்தவும் மற்றும் அதன் சிறப்புகூறுகளில் ஈடுபாடு செலுத்தவும் உதவுகிறது. இத்திறன் கலாசாரங்கள் மதிக்கும் தனிஒரு மனிதன் சார்ந்த உள்ளார்ந்த பண்புகளை விளக்குகிறது.
கற்பித்தலில் பல்திறன் கொள்கை பயன்பாடு
வழக்கமாக, பள்ளிகள் கணித/தர்க்க ரீதியான மற்றும் மொழி ரீதியான(பெரும்பாலும் எழுத படிக்கத் தெரிதல்) திறன்களை வளர்ப்பதில் முக்கியத்துவம் அளித்திருக்கின்றன. சில மாணவர்கள் இந்த சூழலில் சிறப்பாக செயல்பட்டாலும், இச்சூழலில் சிறப்பாக செயல்பட் முடியாது மாணவர்களும் உள்ளனர். ஹோவர்டின் கொள்கைப்படி கல்வியின் பரந்த நோக்குமூலம் மாணவர்கள் சிறப்பாக கையாளப்படுவர். இதில் ஆசிரியர் பல புதிய முறைகளைக் கையாளுவார். பயிற்சிகள் மற்றும் செயல்முறைகளோடு எழுத்து மற்றும் கணிதத்திறன் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவர்.
பல்திறன் கொள்கையின் செயலாக்கம் பல வழிகளில் விரவியுள்ளது. இக்கொள்கை கல்வி பயில்வதற்கு சிரமம் கொள்ளும் மாணவனை அடையாளம் காணும் ஆசிரியர், அவனுக்கு புதிய முறையைக் கையாள்வது முதல் பள்ளி முழுக்க பல்திறன் கொள்கையை அமல்படுத்துவது வரை அமைந்துள்ளது. பொதுவாகக் கூறினால், இக்கொள்கைப்படி மாணவர்கள் தாங்கள் இயற்கையாகக் கொண்டுள்ள திறன்களுடன் பிற திறன்களைப் உபயோகப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்க்கும் ஆசிரியர்கள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பர்.

பல்திறன்கொள்கையை அமல்படுத்திய 41 பள்ளிகளில் ஹாவர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவைக் கீழே காண்க.
இப்பள்ளிகளில் கடின உழைப்பு , அனைவர் மீதும் மரியாதை மற்றும் அக்கறை என்ற பண்பாடு காணப்படுகிறது. ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பும் கற்றுக்கொள்ளலும் நிகழ்கிறது. வகுப்பறைகள் மாணவர்களுக்கு கட்டுப்பாடுடன்கூடிய தேர்வுகளைத் தருகிறது. சிறந்த செயல்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்க முற்படுகிறது.

உங்கள் பள்ளியில் பல்திறன் கொள்கையைப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மாணவனின் தேவை ஆர்வம் மற்றும் திறன்களைச் சார்ந்து உண்மையான கல்வி பயில வாய்ப்பு கொடுக்கிறீர்கள். இங்கு வகுப்பறை என்பது மெய்யான உலகத்தைப் போன்றது. புத்தக ஆசிரியரும் அதனைப் பயன்படுத்துவோரும் சம அளவில் கண்டுபிடிப்பாளர்களாக இருக்கின்றனர். மாணவன் அதிக விழிப்புடனும் ஆர்வமுடனும் இருக்கின்றனர்.

பள்ளிகளில் பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின் பங்களிப்பு அதிகரிக்கும். ஏனெனில், இங்கு மாண்வர்கள் தாங்கள் கற்றதை குழுக்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பிக்கின்றனர். தொழில் பழகுமுறை என்ற செயல்முறை மூலம் கல்வி பயில்விப்பதில் சமுதாயத்தில் உள்ளவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய தனிதிறன்களை வளர்த்துக் கொள்வதால் அவன் நிபுணத்துவம் பெற ஊக்கப்படுத்தப்படுகிறான். இது அவனின் சுயமரியாதையை அதிகரிக்கும்.

எதையும் புரிந்துகொள்வதற்காக பயில்வித்தால் அது நேர்மறையான கல்வி அனுபவமாகும். அது மாணவனுக்கு வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறனைக் கொடுக்கும்.

மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில பல்திறன்கொள்கை அமலாக்கம் எவ்வாறு உதவும்?

மாணவர்கள் தங்கள் திறன்களை உணர்வர். ஹோவர்ட் கார்டனர் கூற்றுப்படி கல்வி கற்பது என்பது ஒரு சமூக மற்றும் மனம் சார்ந்த செயல். மாணவர்கள் தங்களின் பல்வேறு திறன்களை அறியும்போது

அவர்களாகவே பயிலத் தொடங்குவர்

தங்களின் தனிப்பட்ட பலங்களை அறிவர்.

மாணவர்களின் புத்திக்கூர்மையையும் தங்களின் அறிவுத்திறனையும் ஆசிரியர்கள் அறிந்துகொள்வர். பிறருடன் எளிதில் கலந்து பழகக்கூடிய மாணவனை அடையாளம் காண்பது சான்றாக பிற மாணவர்களுக்கு அத்திறனை வளர்க்க வாய்ப்பாக அமையும். எனினும் பல்திறன் கொள்கை ஐ.க்யூவை (IQ) வைத்து மாணவர்களைத் தரம் பிரிக்க உதவாது.

மாணவர்கள் ஒரு பொருளைப் புரிந்துகொள்வதைப் பல வழிகளில் அடையலாம். "மணல் என்றால் என்ன?" என்ற கேள்விக்கு அறிவியல் பூர்வமான, கவித்துவமான, கலைநயமிக்க, இசைசார்ந்த புவியியல் ரீதியாக எனப் பல வழிகளில் பதில் பெறலாம்.