பாரத ஜனங்களின் தற்கால நிலைமை நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) மந்திர வாதி என்பார் - சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள் - இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், அப்பால் எவனோ செல்வான் - அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடிஎன் றால் அது பெரிதா மோ? ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார, ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார், நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு) ---- போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ இன்று பார தத்திடை நாய்போல ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர் சிறிய வீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா நோய்க ளற்ற உடலினாய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய் வா வா வா இளைய பார தத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே கலைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல் விழியி னால் விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா முற்றி நின்ற வடிவினாய் வா வா வா முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற் றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா ----- பாரத சமுதாயம் ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம் பல்லவி பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத) அனுபல்லவி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத) சரணங்கள் மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில் வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு, கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின்றித் தரு நாடு - இது கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத) இனியொரு விதிசெய் வோம் - அதை எந்த நாளும் காப்போம், தனியொரு வனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத) எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான், எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத) எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத) ---- ஜாதீய கீதம் (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு) இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை! குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை! நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும் அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி! பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே) நீயே வித்தை நீயே தருமம்! நீயே இதயம் நீயே மருமம்! உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே! ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) ஒருபது படைகொளும் உமையவள் நீயே! கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ! வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே) போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை! இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை சாமள நிறத்தினை சரளமாந் தகையினை! இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை! தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே) ---- ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு) நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார் நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும், கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்? ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை, மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே) அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ. ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே) பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும் அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே) திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை! தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை பெருகு மின்ப முடையை குறுநகை பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை. இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) ---- தமிழ்நாடு செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்) ------ தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! தந்தை அருள்வலி யாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலி யாலும் இந்தக் கணமட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள்வலி யாலும் - இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும் புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். ----- தமிழ் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். ---- தமிழ்மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! ---- தமிழச் சாதி. ..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். ஏனெனில் சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன், தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் எனினும் இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய். ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல், தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், சாத்திர மின்றேற் சாதியில்லை, பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - இவர்தம் உடலும் உள்ளமும் தன்வச மிலராய் நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் உய்வகைக் குரிய வழிசில உளவாம். மற்றிவர் சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) -- ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன், ஒரு சார் மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும் நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை பல அவை நீங்கும் பான்மையை வல்ல என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், என்பதே யாகும்; இஃதொரு சார்பாம் பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் தானே தனிமுதற் கடவுள் என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்? நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் கலிதடை புரிவன் கலியின் வலியை வெல்லலா காதென விளிம்புகின் றனரால், நாசங் கூறும் எநாட்டு வயித்தியர் இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின் இடையே நம்மவர் எப்படி உய்வர்? விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருவி யிருக்கின் றாயடா? விதி மேலே நீ கூறிய விநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீ ராயின், அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் - ... ...- வாழிய செந்தமிழ்! (ஆசிரியப் பா) வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ----- சுதந்திரம் சுதந்திரப் பெருமை ( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு) வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் பொய்யென்று கண்டாரேல் - அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ? (வீர) மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படு மாறுளதோ? (வீர) விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்கு வாரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ? (வீர) ---- சுதந்திரப் பயிர் தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே. ---- சுதந்திர தாகம் ராகம் - கமாஸ் தாளம் - ஆதி என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ? ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ! வீர சிகாமணி! ஆரியர் கோனே! ---- சுதந்திர தேவியின் துதி இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே. நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வ ரேனும், பன்னருங் கல்வி கேள்வி, படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத பெருமையிற் சிறந்தா ரேனும், அன்னவர் வாழ்க்கை பாழாம், அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். தேவி! நின்னொளி பெறாத தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ ? செம்மை அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ? காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்க ளுண்டோ ? பாவிய ரன்றோ நிந்தன் பாலனம் படைத்தி லாதார்? ஒழிவறு நோயிற் சாவார், ஊக்கமொன் றறிய மாட்டார், கழிவுறு மாக்க ளெல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார் இழிவறு வாழ்க்கை தேரார், கனவிலும் இன்பங் காணார், அழிவுறு பெருமை நல்கும் அன்னை! நின் அருள் பெறாதார். வேறு தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே. அம்மை உன்றன் அருமை யறிகிலார் செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றிநினைப் புதுநிலை யெய்தினர், கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின் பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர். அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் என்ன கூறிஇசைத்திட வல்லனே பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். பேர றத்தினைப் பேணுதல் வேலியே! சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன். ---- விடுதலை ராகம் - பிலகரிவிடுதலை விடுதலை! விடுதலை! விடுதலை! பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுதலை! திறமை கொண்டதீமை யற்ற தொழில் புரங்ந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச மானமாக வாழ்வமே! (விடுதலை) மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையி னும்ந மக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) ---- ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்