துறவறவியல்

அருளுடைமை

241. செல்வத்துள் செல்வம் அருட் செல்வம் - செல்வங்கள் பவற்றுள்ளும் ஆராய்ந் தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம்; பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள-அஃது ஒழிந்த பொருளான்வரும் செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.

விளக்கம்

(அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்: ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.) ---

242.. நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத்துணை யாம் அறம் யாது?' என்று ஆராய்ந்து, அருளுடையராக; பல ஆற்றான் தேரினும் துணை அஃதே-ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாம் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.

விளக்கம்

(அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது: 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

243. இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.

விளக்கம்

('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன்கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.) ---

244. மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல்என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.

விளக்கம்

(உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல் துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.) ---

245. அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையோர்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; வளி வழங்கும் மல்லம்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.

விளக்கம்

(சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார், 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.) ---

246 அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.

விளக்கம்

('உறுதிப் பொருள்: அறம். துன்புறுதல், பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலாராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.) ---

247. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.

விளக்கம்

('அவ்வுலகம்' 'இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.) ---

248. பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் - ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர்; அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது-அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒரு காலத்தும் ஆதல் இல்லை.

விளக்கம்

('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.) ---

249. அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.

விளக்கம்

(மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப் பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்து விடும்; அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்துவிடும் என்பது ஆயிற்று; ஆகவே, பிற அறங்கட்கெல்‘ம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்க வரும் குற்றம் கூறப்பட்டது.) ---

250 வலியார் முன் தன்னை நினைக்க-தன்னில் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க; தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.

விளக்கம்

('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறினையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, 'இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம்' என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்