ஊழியல்

ஊழ்

371. கை பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.

விளக்கம்

('ஆகூழ்!' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு-மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.) ---

372. இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும், கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை வரிக்கும்.

விளக்கம்

('கைப்பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்', 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத் தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாகிய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.) ---

373. நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.

விளக்கம்

(பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.) ---

374. உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு; திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு.

விளக்கம்

(செல்வத்தினைப்படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதர்க்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக் காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)

375. செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம் - அதுவேயன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான்.

விளக்கம்

('நல்லவை' 'தீயவை' என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. 'ஊழான்' என்பது அதிகாரத்தால் பெற்றாம். அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.) ---

376. பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மைவிட்டுப் போகா.

விளக்கம்

(பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது, காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.) ---

377. கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லா துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான அல்லது நுகர்தல் உண்டாகாது.

விளக்கம்

(ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் 'வகுத்தான்' என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத்தான்" (தொல். சொல். 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், 'உம்மை' எச்ச உம்மை. வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.) ---

378. துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர்; உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.

விளக்கம்

('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.) ---

379. நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, 'இவை நல்ல' என்று இயைந்து அனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?

விளக்கம்

(தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத் துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.) ---

380. மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும்; தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழின் பெருவலியா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
விளக்கம்

('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதிகொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்