இல்லறவியல்

செய்நன்றி அறிதல்

101 செய்யாமல் செய்த உதவிக்கு= தனக்கு முன்னோர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும் வானகமும் ஆற்றல் அரிது= மண்ணுலகும் விண்ணுலகுங் கைமாறாகக் கொடுத்தாலும் ஒத்தல்அரிது.

விளக்கம்

கைம்மாறுகள் எல்லாம் காரணம் உடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி'யென்று பாடமோதி, மறித்து உதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்த உதவி என்று உரைப்பாரும் உளர்.

102 காலத்தினால் செய்த ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக் கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது-தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.

விளக்கம்

(அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.) ---

103 பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்-'இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்' என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது-அதன் நன்மை கடலினும் பெரிது ஆம்.

விளக்கம்

(இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம். பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.) ---

104 திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.

விளக்கம்

('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக் கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.) ---

105 உதவி உதவி வரைத்து அன்று கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து-அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.

விளக்கம்

(''சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், 'சால்பின் வரைத்து' என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.) ---

106 துன்பத்தின் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க-அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக.

விளக்கம்

(கேண்மை: கேள் ஆம் தன்மை, இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.) ---

107 நம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்-எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.

விளக்கம்

(எழுமை' என்றது வினைப் பயன். தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள். 62). விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புதோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.) ---

108 நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று: நன்று அல்லது அன்றே மறப்பது நன்று-அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.நல்லோர்.

விளக்கம்

(இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.) ---

109 கொன்று அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.

விளக்கம்

(தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.) ---

110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.

விளக்கம்

(பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, 'ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தபுதலும்' (புறநா 34) இதனால் செய்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது. முதலிய பாதகங்களைச் செய்தல்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்