பாயிரவியல்

நீத்தார் பெருமை

21) ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு-விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.

விளக்கம்

(தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது, உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது) ---

22. துறந்தார் பெருமை துணைக் கூறின் - இரு வகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையார் என அரியலுற்றாற் போலும்.

விளக்கம்

(முடியாது என்பதாம். 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.) ---

23 இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று-உலகின்கண் உயர்ந்தது. ('தெரிமாண் தமிழ் மும்மைத்தென்னம்பொருப்பன்'

விளக்கம்

(பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிகுந்தது என்பது கூறப்பட்டது.) ---

24. உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.

விளக்கம்

(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) ---

25. ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.

விளக்கம்

(ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.). ---

26. செயற்கு அரிய செய்வார் - பெரியர்-ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர்.

விளக்கம்

(செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய "நாலிரு வழக்கின் தாபதபக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.) ---

27 சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.

விளக்கம்

(அவற்றின் கூறுபாடு ஆவன: பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவி ஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிரிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.) ---

28 நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.

விளக்கம்

('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல்: பயனான் உணர்த்துதல்.) ---

29. குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; கணம் ஏயும் காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.

விளக்கம்

(சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரேவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், 'கணம் ஏயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.) ---

30. எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.

விளக்கம்

(பூணுதல், விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பக்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கள் மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது. ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்