இல்லறவியல்

புறங்கூறாமை

181 ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.

விளக்கம்

(புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.) ---

182 அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.

விளக்கம்

(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.)

183 புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்-பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்-அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.

விளக்கம்

.(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.) ---

184 கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப்பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.

விளக்கம்

('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.) ---

185 அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றனல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.

விளக்கம்

(மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.) ---

186 பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.

விளக்கம்

('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன் இறத்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)

187 பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றல் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.

விளக்கம்

(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கரு ததான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். 'கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலித். மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)

188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?

விளக்கம்

('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.) ---

189 புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!

விளக்கம்

(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.) ---

190 ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்-ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறாகிய தம் குற்றத்தையும் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?

விளக்கம்

(நடுவு நின்ற ஒப்புக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்