துறவறவியல்

புலான்மறுத்தல்

251. தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை?

விளக்கம்

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக் கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.) ---

252. பொருள் ஆட்சி போற்றார்தார்க்கு இல்லை-பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை-அது போல அருளாள் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.

விளக்கம்

(பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---

253. படை கொண்டார் நெஞ்சம் போல்-கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ் வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.

விளக்கம்

(சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்ட . இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.) ---

254. அருள் யாது எனின் கொல்லாமை-அருள் யாது எனின் கொல்லாமை: அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்; அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.

விளக்கம்

(உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும், 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரியமாக்கியும் கூறினார். அருளல்லது-கொடுமை. சிறப்புப் பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் 'பொருள் அல்லது' எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி, இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கி, 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரு உளர்.) ---

255. உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது-ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.

விளக்கம்

(உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயர்நிலை' என்றார். 'உண்ணின்' என்பது 'உண்ண' எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங் காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---

256. தினற் பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்; விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.

விளக்கம்

('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. 'பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.) ---

257 புலால் பிறிதொன்றன் புண்-புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்-அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும்.

விளக்கம்

('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.) ---

258.. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார்; உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.

விளக்கம்

('தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார். ---

259. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்-தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று-ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.

விளக்கம்

(அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.) ---

.260. கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.

விளக்கம்

கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்