இல்லறவியல்

வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள்-மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை-அதற்குத் துணை. நற்குணங்களாவன: துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.

விளக்கம்

(நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.) ---

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்-மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்-அல்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.

விளக்கம்

(இல்' என்றார் பயன்படாமையின்.) ---

53. இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என்-அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?

விளக்கம்

('மாண்பு' எனக் குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.) ---

54. பெண்ணின் பெருந்தக்க யாஉள ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்-அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.

விளக்கம்

(கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின், 'யா உள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---

55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என-பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பெய் எனப் பெய்யும் மழை-'பெய்' என்று சொல்ல, மழை பெய்யும்.

விளக்கம்

(தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழா நின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.) ---

56 தன் காத்துத் தன் கொண்டான் பேணி-கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகை சான்ற சொல் காத்து-இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண்-மேற் சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.

விளக்கம்

(தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.) ---

57 மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்-மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை-அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.

விளக்கம்

((சிறை: மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை:நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) ---

58 பெண்டிர் பெற்றான் பெறின்-பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர்-புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

விளக்கம்

(வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.) ---

59 புகழ் புரிந்த இல் இலேர்க்கு-புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை-தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறுபோல நடக்கும் பெருமித நடை இல்லை.

விளக்கம்

('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---

60 மங்கலம் என்ப மனை மாட்சி-ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு-அவை தமக்கு நல்ல அணிகலன் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.

விளக்கம்

('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்