இல்லறவியல்

அடக்கமுடைமை

121 அடக்கம் அமரருள் உய்க்கும்-ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்-அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.

விளக்கம்

('இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' (நான்மனிக். 7) என்றார்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.) --

122 உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை-உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க-ஆதலான், அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.

விளக்கம்

('உயிர்' என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.) ---

123 அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்-'அடங்குதலே நமக்கு அறிவாவது' என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.

விளக்கம்

(இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.) ---

124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி; மலையினும் மானப் பெரிது-மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.

விளக்கம்

(திரியாது அடங்குதல்-பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.) ---

125 பணிதல் எல்லார்க்கும் நன்றாம்-பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து-அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம்சிறப்பினை உடைத்து.

விளக்கம்

(பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார், அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்த காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்துச் சிறப்புக் கூறப்பட்டது.) ---

126 ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.

விளக்கம்

(ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுத்தாமல் அடக்க வேண்டும் என்பார், 'ஆமை போ' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.) ---

127 யாகாவாராயினும் நாகாக்க-தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்-அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.

விளக்கம்

('யா' என்பது அஃறினைப் பன்மை வினாப் பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உரை நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர், செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.) ---

128 தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்-தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும்-அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.

விளக்கம்

(தீயசொல்லாவன-தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. 'ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.) ---

129 தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்: நாவினால் சுட்டவடு ஆறாது-அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

விளக்கம்

(ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது, குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.) ---

130 கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செல்வி-மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை; அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து-அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று.

விளக்கம்

(அடங்குதல்-மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி-தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி, முகங்களின் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்