பாயிரவியல்

அறன் வலியுறுத்தல்

31 சிறப்பு ஈனும்-வீடுபேற்றையும் தரும்: செல்வமும் ஈனும்-துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்-ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?

விளக்கம்

(எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்: மேன் மேல் உயர்தல். ஈண்டு 'உயர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனான் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது) ---

32 அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை-ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை-அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.

விளக்கம்

(அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை' என மேற்சொல்லியவதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.) ---

33. ஒல்லும் வகையான்-தத்தமக்கு இயலுந்திறத்தான்; அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்-அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.

விளக்கம்

(இயலுந்திறம் ஆவது-இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல். ஓவாமை, இடைவிடாமை. எய்தும் இடம் ஆவன: மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள்ஆவன: முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.) ---

34 மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன்-அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர-அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா ஆரவார நீர்மைய,

விளக்கம்

(குற்றம் தீயன சிந்தித்தல், பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழியே ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.) ---

35 அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி-அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்-அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம்-இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.

விளக்கம்

(இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.) ---

36 அன்று அறிவாம் என்னாது அறம் செய்க- 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை-அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.

விளக்கம்

('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.) ---

37. அறுத்து ஆறு இது என வேண்டா-அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை-சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.

விளக்கம்

(பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். 'உணரப்படும்' என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.) ---

38 வீழ் நாள் படாமை நன்று ஆற்றின்-செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்-அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். விளக்கம்

(ஐவகைக் குற்றத்தான் வரும் இரு வகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் 'வாழ்நாள்' எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன: நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.) ---

39 அறத்தான் வருவதே இன்பம்-இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த-அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல-அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.

விளக்கம்

(ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, "தூங்கு கையான் ஓங்கு நடைய" (புறநா.22) என்புழிப்போல. இன்பம்-காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே, துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின், 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது. ---

40. ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவனுக்குச் செய்தற்பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே-ஒழிதற்பான்மையது தீவினையே.

விளக்கம்

('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்