இல்லறவியல்

அழுக்காறாமை

161 . ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக கொள்க-தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.

விளக்கம்

(இயல்பு-அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.) ---

162 யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை-மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.

விளக்கம்

(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.) ---

163 அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.

விளக்கம்

('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.) ---

164 அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.

விளக்கம்

(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.) ---

.165 ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.

விளக்கம்

('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.) ---

166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்கு கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்-உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.

விளக்கம்

(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல், 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.) ---

167 அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும்.

விளக்கம்

(தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.) ---

168 அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.

விளக்கம்

(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது. ---

169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.

விளக்கம்

(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.) ---

170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.

விளக்கம்

(இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்