துறவறவியல்

அவாவறுத்தல்

361. எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும்வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து; அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

(உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக் கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் 'பிறப்பினும் வித்து' என்றும், கதிவயத் தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறுபடாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும், இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல் கூறப்பட்டது.) ---

362. வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் -பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.

விளக்கம்

(அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், 'பிறவாமையை வேண்டும்' என்றும், ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒரு பொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், 'அது வேண்டாமை வேண்ட வரும்' என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின்றமையின், 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.) ---

363. வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல் - இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.

விளக்கம்

(மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---

364. தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை; அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.

விளக்கம்

(வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை என்பது அவா இன்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல்-இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்கு பரம்பரையான்அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரம் வழியும் இதனால் கூறப்பட்டன.) ---

365. அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவாஅற்றவர்கள்; மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி ஆற்றிலர்.

விளக்கம்

(இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.) ---

366. ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை, மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவர்; அஞ்சுவதே அறன்-ஆகலான், அவ்வவாவை அஞ்சி காப்பதே துறவறமாவது.

விளக்கம்

('ஓரும்' என்பன அசைநிலை. அநாதியாய்ப் போந்த அவா, ஓரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது, வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம் என்பதூஉம் கூறப்பட்டன.) ---

367. அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித்துவரக் கெடுக்க வல்லன் ஆயின்; தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.

விளக்கம்

(கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை.'வினை' சாதி யொருமை, தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறு அறஞ்செய்ய வேண்டா; செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) ---

368. அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.

விளக்கம்

(உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இப்பொழுது அவாவால் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)

369. அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.

விளக்கம்

(துன்பத்துள் துன்பம் - ஏனைத்துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின் கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து 'அவா' என்றும், 'துன்பத்துள் துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாது நிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது' என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்' என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது.) ---

370. ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்; அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும்.

விளக்கம்

(நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம் பயனும் நிலையாமையின் வேண்டாதனவாயபொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயினஇன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை, 'பேரா இயற்கை' என்றும், அஃது அவா நீத்த வழிப் பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார்; "ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு" (திருவாய், 8,8,6) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வட நூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்