துறவறவியல்

கள்ளாமை

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்; எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.

விளக்கம்

('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும், நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல், ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.) ---

282. உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்து கொள்வோம் என்று கருதற்க.

விளக்கம்

('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம், அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.) ---

283. களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.

விளக்கம்

('ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர். ---

284. களவின்கண் கன்றி காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அப்பொழுது இனிது போலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.

விளக்கம்

(கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், 'வீயா விழுமம் தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.) ---

285. அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது.

விளக்கம்

(தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வ பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.) ---

286. அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெற்றியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.

விளக்கம்

(உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உள்ள விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் விட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் 'தருமத் தியானம்' என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல். ---

287. களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் 'அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.

விளக்கம்

(இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவெனும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்ற' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) ---

288. அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றார்போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.

விளக்கம்

(உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.) ---

289. அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்.

விளக்கம்

(தீய நினைவுகளான : பொருளுடையாரை வஞ்சிக்கு மாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின், 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையவாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி, கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.) ---

290. கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.

விளக்கம்

(உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள் 566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்