துறவறவியல்

கூடாவொழுக்கம்

271. வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.

விளக்கம்

(காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது, இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் 'வஞ்சமனம்' என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும், உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம் முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.) ---

272. வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.

விளக்கம்

('வான் உயர் தோற்றம்' என்பது ''வான் தோய்குடி'' (நாலடி. 142) என்றார்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே, நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.) ---

273. வலி இல் நிலைமையான் வல் உருவம் - மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையடார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.

விளக்கம்

(இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், 'மேய்ந்தற்று' என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம்; ஆகவே, வல்உருவங் கோடற்கு பயன் அன்ன காரணங்களான் உலகத்தால் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.) ---

274. தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிரித்தாற் போலும்.

விளக்கம்

('தவம் ஆகுபெயர், தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல் . இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

275. பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு 'யாம் பற்று அற்றேம்' என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்; எற்று எற்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் 'என் செய்தோம்! என் செய்தோம்! என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.

விளக்கம்

(சொல் அளவல்லது பற்று அறாமையின், 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்வார். அதன் விளைவின் கண் "அந்தோ வினையே என்றழுவர்" (சீவக. முத்தி, 27) ஆகலின், "எற்று எற்று" என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.) ---

276. நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து; துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர்போல்; வண்கணார்இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை.

விளக்கம்

(தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, "யாம்மறுமைக் கண் தேவராதற் பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்" என்று அறியாது ஈந்தாரை, அது கொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல் 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி - உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர்ஏறே" (சீவக. முத்தி 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.) ---

277. குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினம், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்.

விளக்கம்

('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. "ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே" (திருக்கோவை 322) என்பதும் அது.) ---

278. மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக; மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுடையராய் நீரின் மூழ்கிக் காட்டி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.

விளக்கம்

(மாசு: காம வெகுளி மயக்கங்கள்: அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுததற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி, 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப் பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.) --

279. கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது: யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல்பட கூற்றானே அறிந்து கொள்க.

விளக்கம்

(கணைக்குச் செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறிவும் ஆறு கூறப்பட்டது.) ---

280. மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின்.

விளக்கம்

(பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்