துறவறவியல்

தவம்

261. தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே-உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.

விளக்கம்

(மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' என்பதனை, 'யானைக்குக் கோடு கூரிது' என்றார்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனான் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.) --

262. தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்-ஆகலான், அத்தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயன்இல் முயற்சியாம்.

விளக்கம்

(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.) ---

263. மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்!

விளக்கம்

(துப்புரவு - அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்" பயத்தது ஆகலின் (குறள் 265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும் எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.) ---

264. ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும்; உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்; எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.

விளக்கம்

(முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.) ---

265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்-முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம். ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம். இம்மைக்கண் அறிவடையோரான் முயலப்படும்.

விளக்கம்

('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---

266. தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவர் துறந்து தவத்தைச் செய்வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.

விளக்கம்

(அநித்தமாய் மூவகைத் துன்பத்தாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்திவருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.) ---

267. சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.

விளக்கம்

('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.) ---

268. தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.

விளக்கம்

(தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட்பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.) ---

269. கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.

விளக்கம்

(சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைக்கூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.) ---

270. இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.

விளக்கம்

(செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன; என்னை? "நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்" (நாலடி. 251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப் பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்