இல்லறவியல்

பயனில சொல்லாமை

191) பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும்.

விளக்கம்

(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. ---

192). பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.

விளக்கம்

((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)

193 பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.

விளக்கம்

(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.) ---

194 பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.

விளக்கம்

(பண்பு: இனிமையும் மெய்யும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.) ---

195 பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.

விளக்கம்

(நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.) ---

196 பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.

விளக்கம்

('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.) ---

197 நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக-சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்; பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.

விளக்கம்

('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.) ---

198 அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.

விளக்கம்

(அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.) ---

199 பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்; மருள் தீர்ந்த மாசுஅறு காட்சியவர்-மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.

விளக்கம்

('தூய அறிவு' மெய்யறிவு, 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புப் பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல் சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.) ---

200 சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.

விளக்கம்

('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்