இல்லறவியல்

பிறனில் விழையாமை

141 பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை; ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்-ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.

விளக்கம்

(பிறன் பொருள்:பிறன் உடைமை. 'அறம், பொருள்' என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார். எனவே, அப் பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.) ---

142 அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.

விளக்கம்

(அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.) ---

143 மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்; விளிந்தாரின் வேறு அல்லர்-உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.

விளக்கம்

(அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்' என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.) ---

144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினம் ஒருவர்க்கு யாதாய் முடியும்; தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.

விளக்கம்

(இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். "என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்" (கலித்.பாலை.6) என்புழிப்போல, உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.) ---

145 எளிது என இல் இறப்பான்-'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்-மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.

விளக்கம்

(இல்லின்கண் இறத்தல்-இல்லான்கண் நெறிகடந்து சேறல்.) ---

146 இல் இறப்பான்கண் பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து; பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் 'நீங்காவாம்,

விளக்கம்

(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.) ---

147 அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்-பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.

விளக்கம்

(ஆண் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.) ---

148 பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை; சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு-சால்புடையார்க்கு அறனும் ஆம்; நிரம்பிய ஒழுக்கமும் ஆம். புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார்.

விளக்கம்

('ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.) ---

149 நாம நீர் வைப்பின்-அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின்-எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்; பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார்-பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார்.

விளக்கம்

(அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.) ---

150 அறன் வரையான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று-அவனுக்குப் பிறன் எல்லைகண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.

விளக்கம்

(இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன்இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்