இல்லறவியல்

புகழ்

231.. ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.

விளக்கம்

(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.) ---

232. உரைப்பார் உரைப்பவை எல்லாம்-உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்-வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.

விளக்கம்

('புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்.' (புறநா. 27.) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளுப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க இதனைப் 'பிறர்மேலும் நிற்கும்' என்பார், 'தாம் எல்லாம் சொல்லுக; புகழ் ஈவார்மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.) ---

233. ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.

விளக்கம்

(இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.) ---

234. நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.

விளக்கம்

(புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.) ---

235. நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.

விளக்கம்

('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.) ---

236.. தோன்றின் புகழொடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.

விளக்கம்

(புகழ்; ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.) ---

237. புகழ்பட வாழாதார் - தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார்-அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?

விளக்கம்

(புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.) ---

238. இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.

விளக்கம்

('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.) ---

239. இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.

விளக்கம்

(உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.) ---

240. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.

விளக்கம்

(வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்; இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலாயாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள் 50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்