துறவறவியல்

மெய்யுணர்தல்

351. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.

விளக்கம்

(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.) ---

352. மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையர் ஆயினார்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.

விளக்கம்

(இருள்: நரகம்; அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள் நீங்கி' என்னும் வினையெச்சம், 'காட்சியவரென்னும்' குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.) ---

353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.

விளக்கம்

(ஐயமாவது, பல தலையாய உணர்வு. அஃதாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; 'பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ?' எனத் துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம் களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்' என்றும், அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார்; கூறவே, ஐய உணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.) -

354. ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றைவிட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.

விளக்கம்

(ஐந்தாகிய உணர்வு: மனம். அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின், 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானம் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.) ---

355. எப்பொருள் எத்தன்மையத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு . அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.

விளக்கம்

(பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது, 'கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை' என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதொரு குடியும் , வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதினையும நிலைத்திணையும் ஆகிய பொருள்கள் எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான், மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.) ---

356. ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.

விளக்கம்

('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.) ---

357. உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.

விளக்கம்

('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.) ---

358. பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.

விளக்கம்

(பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள்அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச் சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும், 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இது பற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு, ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் 'சமாதி' எனவும், 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது. அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காரத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.) ---

359. சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.

விளக்கம்

(ஆகுபெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன - பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன.அவை விளக்கின்முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான், நல்வினைப் பயனும் 'நோய்' எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடைய உயிரைச் சாராமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்' என்பது, இதனால் கூறப்பட்டது.) ---

360. காமம் வெகுளி மயக்கம் இவை முன்றன் நாமம் கெட ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்; நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.

விளக்கம்

(அநாதியாய அவிச்சையும், அதுபற்றி 'யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி, 'எனக்கு இது வேண்டும்' என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், எண வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றின் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிபு. 'நோய்' என்பது சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய வினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டு பாட்டும் இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்