இல்லறவியல்

விருந்தோம்பல்

81 இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்-மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.

விளக்கம்

(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.) --

82 சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று.

விளக்கம்

(சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.) ---

83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை.

விளக்கம்

(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.) ---

84 செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.

விளக்கம்

(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.) -

85 விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.

விளக்கம்

('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) ---

86 செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.

விளக்கம்

('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) ---

87 வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.

விளக்கம்

(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு "தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்-வான் சிறிதாப் போர்த்து விடும்" (நாலடி,38) ஆகலின், 'இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை' என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.) ---

88 பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.

விளக்கம்

("ஈட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்" (நாலடி. 280) ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.) ---

89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை-உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு-அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.

விளக்கம்

(உடைமை-பொருளுடையனாம் தன்மை. பொருளாள் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---

90 அனிச்சம் மோப்பக் குழையும்-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்-விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.

விளக்கம்

('அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்