இல்லறவியல்

வெஃகாமை

171 நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்-அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.

விளக்கம்

(குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.) ---

172 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்-பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர்-நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.

விளக்கம்

('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.) ---

173 சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர்-அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.

விளக்கம்

('பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.) ---

174 இலம் என்று வெஃகுதல் செய்யார்-'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.

விளக்கம்

(வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்லவிடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.) ---

.175. அஃகி அகன்ற அறிவு என்னாம்-நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.

விளக்கம்

('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவம், கடியனவும் முதலியன் செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார். ---

176 அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்-பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.

விளக்கம்

(இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.) -

177 வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க-பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம்-பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.

விளக்கம்

('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது.)-

178 செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்

விளக்கம்

('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.) ---

179 அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்-திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.

விளக்கம்

(அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.) ---

180 எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.

விளக்கம்

(பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல் ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர் யாவரையும் கீழ்ப்படுத்தலின், 'விறல் ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்