துறவறவியல்

வெகுளாமை

301. சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்?

விளக்கம்

('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.) ---

302. சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.

விளக்கம்

(செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை,' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.) ---

303. யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும் - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.

விளக்கம்

(வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார் மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்,' என்றும் கூறினார்.) ---

304. நகையும் உவகையம் கொல்லும் சினத்தின - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது; பிற பகையம் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.

விளக்கம்

(துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்ற அருள்முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லையாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.) ---

305 தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச் சினம் வராமல் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச் சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.

விளக்கம்

("வேண்டிய வேண்டியாங்கு எய்தல்" (குறள் 265) பயத்தாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதுலின் 'தன்னையே கொல்லும்' என்றார். ''கொல்ச் சுரப்பதாங் கீழ்" (நாலடி (279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.) ---

306 சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புனையையும் சுடும்.

விளக்கம்

(சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்; 'தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, 'உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; 'இந் நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்,' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியயராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம் என்னும் ஏமப்புணை' என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.) ---

307 சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.

விளக்கம்

(வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றார்போல, ஈண்டுக் குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---

308 இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று . அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.

விளக்கம்

(இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனைவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.) ---

309 உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின்; உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.

விளக்கம்

('உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---

310. இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.

விளக்கம்

(மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும், கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின், அவரை 'இறந்தார் அனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதற்கு உரிய யாக்கை நின்றதாயினம், ஞானத்தான வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை 'வீடு பெற்றாரோடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்