கற்பியல்

கனவுநிலையுரைத்தல்

1211. தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக யாதனைச் செய்வேன்?

விளக்கம்

('விருந்து' என்றது, விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.) ---

1212. தூது விடக் கருதியான் சொல்லியது. கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதல்ரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.

விளக்கம்

('கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பு தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.) ---

1213. ஆற்றான் எனக் கவன்றாட்கு 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது. நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின் கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.

விளக்கம்

(மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சி யானே யான் ஆற்றியுளேன் ஆகினறேன். 'நீ கவலல் வேண்டா,' என்பதாம்.) ---

1214. இதுவும் அது. நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக்கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.

விளக்கம்

(காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.) ---

1215. இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும் தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.

விளக்கம்

('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு - ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)

1216. இதுவும் அது. நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.

விளக்கம்

('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.) ---

1217. விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாது கொடியவர்; கனவினான் எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?

விளக்கம்

(பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கி, 'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர்; 'அது கண்டிலம்,' என்பதாம்.) ---

1218. தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது. துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.

விளக்கம்

(கலவிவிட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை,' என்பதாம்.) ---

1219. இதுவும் அது. கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின் கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவா நிற்பர்.

விளக்கம்

(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய் அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின் கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.) ---

1220. இதுவும் அது இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ?

விளக்கம்

('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளே யாம்,' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்