கற்பியல்

உறுப்புநலனழிதல்

1231. ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

விளக்கம்

(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.) ---

1232. இதுவும் அது. பசந்து பணி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவது போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும்.

விளக்கம்

(சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---

1233. இதுவும் அது. மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று; இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்தவதுபோல மெலியா நின்றன; இது தகாது.

விளக்கம்

('அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.) _---

1234. இதுவும் அது. துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றி, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும். இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன; இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.

விளக்கம்

(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால் செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனி அவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ?' என்பதாம்.) ---

1235. இதுவும் அது. கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியொடு தொல் கவின் வாடிய தோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை?

விளக்கம்

('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.) ---

1236 தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தொடியொடு தோற்நெகிழ-யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.

விளக்கம்

(ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு,' என்பதாம்.) ---

1237. அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவர் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினாள் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி: பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின அதனை ஒப்பதில்லை.

விளக்கம்

('கொடியார்க்கு' என்பதும் கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடா நின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்; ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; வந்தால், இவையெல்லாம் நீங்கும்; நீங்க, அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால், 'பாடு பெறுதியோ?' என்றாள்.) ---

1238. வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒரு ஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது; அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?

விளக்கம்

('இனிக் கடிதிற் சொல்லவேண்டும்' என்பது கருத்து.)

1239. இதுவும் அது. முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையாவன கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?

விளக்கம்

(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி.) ---

1240. இதுவும் அது. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாக ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.

விளக்கம்

('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது; யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்,' எனத், தன் வன்மையும் தன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம். ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும்; யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்