கற்பியல்

பசப்புறுபருவரல்

1181. (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?

விளக்கம்

('பிற என்பது அசைநிலை உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ?' என்றும் கூறினாள்.) ---

1182. ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும்; பசப்பு இப் பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என்மேனிமேல் இவர் தந்து ஊரும் - என்மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.

விளக்கம்

(''குருதி கெப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' (சீவக விமலை. 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 'அஃது உரிமை பற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.)

1183. 'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.

விளக்கம்

(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.) ---

1184. 'பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்,' என்றவழிச் சொல்லியது. யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது.

விளக்கம்

(பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத்தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.) ---

1185. 'காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை,' என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது. எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கேசெல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண்- என்மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?

விளக்கம்

('உவக்காண், இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள். தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன?' என்பதாம்.) ---

1186. இதுவும் அது. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளேபோல; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.

விளக்கம்

('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது?' என்பாம்.) ---

1187. இதுவும் அது. புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடை பெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.

விளக்கம்

('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.) ---

1188. 'நீ இங்ஙனம் பசக்கற்பாலைபல்லை,' என்ற தோழியோடு புலந்து சொல்லியது. இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது;

விளக்கம்

(இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.) ---

1189. இதுவும் அது. நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக.

விளக்கம்

(நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.) ---

1190. தரைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவறி அவள் இயற்பட மொழிந்தது. நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்: பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.

விளக்கம்

('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள். அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்