அங்கவியல்

தூது

681. அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின் கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.

விளக்கம்

[முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம். வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சேர்ந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.] ---

682. அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.

விளக்கம்

[ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகையார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.] ---

683. வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றிதரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லானாதல்.

விளக்கம்

['கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லானாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதால்.] ---

684. அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க - வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.

விளக்கம்

[இம்மூன்றும் ஒருவன் பாற் கூடுதல் அரிது ஆலின், 'செறிவுடையான்' என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.] ---

685. தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும் வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும் வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான்.

விளக்கம்

[பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர்: இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, இவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்க வல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.] ---

686. கற்று- நீதி நூல்களைக் கற்று; செலச் சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவன் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான்.

விளக்கம்

[அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கற்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேண்டுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.] ---

687. கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமையறிந்து, காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து, இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி சொல்லுமாற்றை முன்னே விசாரித்து, உரைப்பான் தரை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான்.

விளக்கம்

[செய்யும் முறையாவது; அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்தாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.] ---

688.வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந்தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. .

விளக்கம்

[பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி, 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும், யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.] ---

689. விடு மாற்றன் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய் சோரா வன் கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான்.

விளக்கம்

[தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.] ---

690. இறுதி பயப்பினும் எஞ்ஞாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான்.

விளக்கம்

['இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்