அங்கவியல்

பகைத்திறந்தெரிதல்

871. பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.

விளக்கம்

(மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.) ---

872. வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.

விளக்கம்

('சொல்' ஆகுபெயரான் நீதி நூல்மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று. வந்ததாகினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.) ---

873. தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன்.

விளக்கம்

(தனிமை - சுற்றம், நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க, அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற் கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகை போடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.) ---

874. பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்து கொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது; பெருமையுள்ளே தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு.

விளக்கம்

(வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல்: அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.) -.---

875. தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையோ எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க.

விளக்கம்

(பொருந்தியது - ஏனையதனை வேறதற்கு ஏற்றது: அப்பொழுது அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்து கொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.) ---

876. தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்; அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க.

விளக்கம்

('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது) ---

877. நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்தனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.

விளக்கம்

('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.) ---

878. வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.

விளக்கம்

(வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போல் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.) ---

879. முள் மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கை கொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்.

விளக்கம்

('களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக; அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும்' என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல். இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.) ---

880. செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கும் மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக.

விளக்கம்

(அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்