ஒழிபியல்

கயமை

1071. மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.

விளக்கம்

(முழுதும் ஒத்தல் தேற்றே காரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.) ---

1072. நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ் மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர் போல அவை காரணமாகத்தம் நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான்.

விளக்கம்

(நன்று என்பது சாதியொருமை உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும், இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலாம், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.) _-

1073. தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்.

விளக்கம்

(உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.) ---

1074. கீழ்-கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்.

விளக்கம்

(அகப்பட்டி; அகமாகிய பட்டி; பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார்; ''நோதக்க செய்யும் சிறுபட்டி'' (கலித். குறிஞ்சி.15) என்றார் பிறரும்.) ---

1075. கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம்.

விளக்கம்

(ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப் படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.) ---

1076. தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்டமறைகளை இடந்தோறும் தாங்கிக் கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.

விளக்கம்

(மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.) ---

1077. கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு; ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத்தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார்.

விளக்கம்

(வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.) ---

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் - மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.

விளக்கம்

(பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.) ---

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காணவற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம்.

விளக்கம்

(உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில் மேல் நின்றன; அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப்படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.) ---

1080. கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக் கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேற எத்தொழிற்கு உரியர்?

விளக்கம்

(உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும். கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒகு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்