அங்கவியல்

நாடு

731. தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது:

விளக்கம்

(மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். "நற்றவஞ் செய்வார்க்கு இடம்; தவம் செய்வார்க்கும் அஃது இடம்" (சீவக. நாமக. 48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.) --

732. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேய்த்தாரானும் விரும்பத் தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின் மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது.

விளக்கம்

(அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில்கிளி அக்கண்அரசண்மையோடு ஆறு.' இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிக விளைவதாயிற்று.) ---

733. பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.

விளக்கம்

(பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத் தொகுதியும். தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.) ---

734. பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.

விளக்கம்

(உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலை படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.) ---

735. பல் குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது.

விளக்கம்

(சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி, புலி கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம் மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.) ---

736. கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்ட விடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப எல்லா நாட்டினும் தலை என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

('அறியாத, குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை ரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகாரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)

737. இருபுனலும் -'கீழ் நீர், மேல் நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயவமாம்.

விளக்கம்

(ஈண்டுப் 'புனல்' என்றது துரவு கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே ஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண்-ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) ---

738. பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

(பிணியின்மை, நிலநலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும், நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும், அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.) ---

739. நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா.

விளக்கம்

(நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. "பொருள் செய்வார்க்கும் அஃது இடம்" (சிந். நாம 48.) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறின்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.) ---

740. வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.

விளக்கம்

('வேந்து அமைவு' எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும், அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவை இல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்