ஒழிபியல்

நாணுடைமை

1011. நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்.

விளக்கம்

('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும் உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) ---

1012. ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே; அவையல்ல.

விளக்கம்

(ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.) ---

1013. உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட, அதனை விடாது.

விளக்கம்

('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---

1014 சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்.

விளக்கம்

(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.) ---

1015. பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.

விளக்கம்

(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

1016 மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.

விளக்கம்

(பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.) ---

1017. நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.

விளக்கம்

(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.) ---

1018. பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து

விளக்கம்

('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.) ---

1019. கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.

விளக்கம்

(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.) ---

1020. அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும்.

விளக்கம்

(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்