அங்கவியல்

பகைமாட்சி

861. வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.

விளக்கம்

('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.) ---

862. அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன், ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்?

விளக்கம்

(சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலிவளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.) ---

863. அஞ்சும் - ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன்.

விளக்கம்

('தஞ்சம்', 'எளியன்' ஒரு பொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.) ---

864. வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன்அல்லன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன் மேற் சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.

விளக்கம்

(நிறை - மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும் மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.) ---

865. வழி நோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றாற்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது.

விளக்கம்

(தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும், தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும், இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.) ---

866. காணாச் சினத்தான் - தன்மையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.

விளக்கம்

(காணாதசினம் என்பது விகாரமாயிற்று. முன்னேனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.) ---

867. அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும. சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும்.

விளக்கம்

(ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின. அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.) ---

868. குணன் இலனாயக் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல்தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து.

விளக்கம்

(குணம் - இளைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும். துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)

869. அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா- அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.

விளக்கம்

(உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணிடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.) ---

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை-நீதி நூலைக் கல்லாதானோட பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-எஞ்ஞான்றும் புகழ் மேவாது.

விளக்கம்

(சிறு பொருள்-முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்