அங்கவியல்

பெண்வழிச்சேறல்

901. மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார்; தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.

விளக்கம்

(மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம்: அஃது அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்லவிடாமையின், விடற்பாற்று என்பதாம்.) ---

902. பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.

விளக்கம்

(எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலம் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண, அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.) ---

903. இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.

விளக்கம்

(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சி யொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம்; ஆகவே, எல்லாக் குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்' என்றார்.) ---

904. மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது.

விளக்கம்

('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.) ---

905. இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.

விளக்கம்

(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.) ---

906. இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும்; ஆண்மையிலர்.

விளக்கம்

(அமரர்போல வாழ்தலாவது, பகைத்து வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது, கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற்கு குற்றம் கூறப்பட்டது.) ---

907. பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து.

விளக்கம்

('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.) ---

908. நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார்.

விளக்கம்

('நல்நுதலாள்' என்பதனை, "அமை ஆர் தோள்" (குறள். 906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்த ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.) ---

909. அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாக.

விளக்கம்

(புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப்பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின என்பது தோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.) ---

910. எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.

விளக்கம்

("இடன் இல் பருவத்தும்" [குறள் 218] எனவும், "இடன் இன்றி இரந்தோர்க்கு" [கலித். பாலை.1] எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப் பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம் மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்