அங்கவியல்

பேதைமை

831. பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.

விளக்கம்

(கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள். தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.) ---

832. பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்.

விளக்கம்

(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.) ---

833. நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாட வேண்டுமவற்றை நாடாமையும்; நார்இன்மை - யாவர் மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில்.

விளக்கம்

(நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுமவை - கருமங்களில் செய்வன தவிர்வன முறிதல் : கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.) ---

834. ஓதி - மன மொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை.

விளக்கம்

(உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) ---

835. பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்பள்ளே செய்து கொள்ள வல்லனாம்.

விளக்கம்

(எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புகளிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பம் ஊழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.) ---

836. கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வாளுயின்; பொய்படும் ஒன்றோ புனை பூணும் - அதுவும் புரைபடும்; தானும் தளை பூணும்.

விளக்கம்

(புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.) ---

837. பதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியா நிற்பர்.

விளக்கம்

(எல்லா நன்மையுஞ் செய்து கோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றற்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.) ---

838. பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்.

விளக்கம்

('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது. ---

839. பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது.

விளக்கம்

(நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.) ---

840. சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும அமளிக் கண்ணே வைத்தாற் போலும்.

விளக்கம்

(கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்