அங்கவியல்

மன்னரைச் சேர்ந்தொழுதல்

691. இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.

விளக்கம்

[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.] ---

692. மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.

விளக்கம்

[ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேம்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து, அவர் தாமே எல்லாச் செல்வமும் நல்குவர் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.] ---

693. போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.

விளக்கம்

[அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.] ---

694. ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக.

விளக்கம்

[சேர்தல்:பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.] ---

695. மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கோளாது; தொடரார்- அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன்தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.

விளக்கம்

['ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.] ---

696. குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி - சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.

விளக்கம்

[குறிப்புக் காரியத்தின் கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனிற்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேண்டாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.] ---

697. வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.

விளக்கம்

['வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும், வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.] ---

698. இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும். அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.

விளக்கம்

[ஒளி; உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.] ---

699. கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலை பெற்ற அறிவினையுடையார்.

விளக்கம்

[கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், ன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.] ---

700. பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.

விளக்கம்

[அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்