அங்கவியல்

வரைவின்மகளிர்

911. அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.

விளக்கம்

(பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.) --

912. பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.

விளக்கம்

\(பண்பு சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும், அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பது தோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.) ---

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.

விளக்கம்

(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.) ---

914. பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார்.

விளக்கம்

(அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.) ---

915. மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதி நன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.

விளக்கம்

(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்து புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்' என்றும் கூறினார்.) ---

916. தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்.

விளக்கம்

(ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தந்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.) -

917. நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினார் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்.

விளக்கம்

(பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார் தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.) ---

918. மாய மகளிர் முயக்கு - உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பது தோன்ற அவர் மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.) ---

919. வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது; விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம்.

விளக்கம்

(உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.) ---

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.

விளக்கம்

(இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைப்பற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கிப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்