தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மின் நூலகம் தளம் - செய்தி சுருக்கம் பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளது. இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. அனைவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே நூலகத்தை அணுகலாம்; அரிய புத்தகங்களையும் வாசிக்கலாம்; பதிவிறக்கிக்கொள்ளலாம். அப்படியொரு மின் நூலகத்தைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த மின் நூலகத்தில் அரிய இதழ்களும் நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் பண்பாடு, பாரம்பரியம், மரபு, நாகரிகம், கலை, இலக்கணம், இலக்கியம் முதலியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கணித் தமிழை வளர்த்தெடுக்கவுமான பல்வேறு அரும்பணிகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆற்றிவருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக, அறிவை பொதுமைசெய்யும் நோக்கத்தில் 2002ல் நூல்களை மின்னுருவாக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணைய கல்விக்கழகம். முதலில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவிலும் பிடிஎப் வடிவிலும் பதிவேற்றப்பட்டன. பின்னர், நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்க திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்பட கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உள்ள அரிய நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன. இந்த பணிகளுக்கிடையே மின் நூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. தமிழ் மின்னூலக தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716ல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்நூலகம். ராபர்டு கால்டுவெல் எழுதிய, ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’, ‘A History of Tinnevelly’ போன்ற நூல்களுடன் பெரியாரின் ‘குடிஅரசு’, அண்ணாவின் படைப்புகள், ‘திராவிடநாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ என்பன போன்ற திராவிட இயக்கத்தின் முன்னணி இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150ம் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணைய பக்கம் 118.11.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பார்க்க https://tamildigitallibrary.in/