முன்னுரை கிராம மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு பயவுணர்வு மற்றும் அவர்களின் வரலாற்றை சூழ்நிலைக்கேற்ப புதுமையான முறையில் வாய்மொழியாக காப்பாற்றி வெளிப்படுத்துவதே நாட்டுப்புறக் கலையாகும். இவற்றில் சில மிக தொன்மை வாய்ந்ததாகவும் சில புதியவையாகவும் மற்றும் சில அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு அப்போதே உருவாக்கப்படுவதாகும். நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருவதற்கு திரைப்படத் துறையின் வளர்ச்சியே காரணமாகும். இதை பாதுகாக்கும் நடவடிக்கையாக சி.பி. ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் பள்ளிகளில் நாட்டுப்புறக் கலைகளின் மறுமலர்ச்சி என்ற திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் நடத்தியது. திட்டத்தின் நோக்கம் குழந்தைகளின் வளர்ச்சியையும் கல்வித் திறனையும் நாட்டுப்புறக் கலைகளின் மூலமாக வெளிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டுப்புறக் கலைகளில் விற்பன்னர்களையும், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் திறமையின் மூலமாக இயற்கையின் அற்புதங்களையும், மனிதநேயத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முறைகளையும், ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், சுகாதாரத்தையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் தேச ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவி புரிகிறது. கலை மற்றும் கைத்தொழில்களுக்கு தற்போதைய பள்ளிப்பாடத்திட்டத்தில் குறைந்த நேரமே ஒதுக்கப்படுவதால் இத்துறையில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பயிற்சியளிப்பதற்கோ போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலும் திரைப்படங்களுக்கும் சாஸ்திரீய சங்கீதத்திற்கும், நடனத்திற்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் மக்களின் நாட்டுப்புறக் கலாச்சாரங்கள் வெகுவாக மறைந்து வருகிறது. நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மக்களுடைய திறமைகளை சிறந்த முறையில் வெளிக்கொணர்வதற்கு நாட்டுப்புறக் கலைகள் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள ஏறத்தாழ அனைத்து கைவினைக் கலைகள் பற்றியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. திறமையும், ஆர்வமும், கடின உழைப்பும் கொண்ட எவரும் சிறப்பான பயிற்சி பெறாவிடினும் இக்குறிப்புகளை பயன்படுத்தி கற்றுக் கொள்ளலாம். கலாச்சாரத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த மறந்தபோதிலும், குழந்தைகள் இதை தமது பிறப்புரிமையாக கருதி செயல்பட வேண்டும். பெற்றோர்களின் குறையை ஆசிரியர்கள் நிறைவு செய்யவும் முடியும். உலக கலைஞர்களிடமிருந்து கடன் பெற்றவையும், மேலை நாட்டுப்பள்ளி பாடங்களின் வெறும்படிகளுமே பரவலாக இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கலைப் பாடத்திட்டங்களாக காணப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட பொருந்தாத ஒரு அமைப்பை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதைக் காட்டிலும், தம்முடைய சொந்த பண்பாட்டை அறிமுகம் செய்வதே ஆசிரியர்கள் விரும்புவதாகும். இங்கு விவரிக்கப்பட்டுள்ள கலைகளும் கைவினைகளும் எந்த பருவ பள்ளி வகுப்பிற்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளத்தகுந்தன. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கேற்ற நுணுக்கமான தஞ்சாவூர் ஓவியமும், பின்னல் கோலாட்டம் போன்ற குழு நடனங்களும், பாலர் பள்ளி குழந்தைகளுக்கேற்ற எளிய வரைபடம், ஒவியம், எளிய கும்மி ஆகியவைகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளன. கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதற்கேற்றவாறு பல செயல்திட்டங்களில், இதை செய், இதை செய்யாதே என்பன போன்ற பல கெடுபிடிகள் இருத்தல் கூடாது. குழந்தைகளின் வயதையும், திறமையையும் மனதில் கொள்க. அவர்களால் முடியாதவற்றை திணித்தல் கூடாது. மிகவும் எளியவற்றை சொல்லி அலுப்பூட்டவும் கூடாது. இதையெல்லாம் ஆசிரியரே முடிவு செய்ய வேண்டும். முடிந்தால் செய்து காட்டுக. பின்னர் குழந்தைகள் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் சுற்றுச்சூழலை கெடுக்கதாத பொருட்களையும், தேவையற்ற பொருட்களையும் குழந்தைகளே தேர்ந்தெடுத்து கொண்டுவந்து அவற்றையே பயன்படுத்தட்டும். இதை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். குழந்தைகள், அவர்களுக்கு தெரிந்த அன்றாட வழக்கத்திலுள்ள பொருட்களையும், வாழ்க்கைக்கு பயன்படும் மரபுசார்ந்த தலைப்புகளையும் பயன்படுத்தலாம். இவற்றுள், உடல்நலம், இயற்கை சுற்றுச்சூழல் போன்றவை அடங்கும். மிகவும் முக்கியமானது என்னவென்றால், மூலப்பொருட்களின் தோற்றம், அவை காணப்படும் இடம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகியவற்றைப்பற்றி குழந்தைகளே அவர்களது கருத்துக்களை வெளியிட வேண்டும். ஆதாரம் : சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேசன்