தஞ்சாவூர் ஓவியம்

தஞ்சாவூர் ஓவியம், ஓவியக்கலைகளிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஒவியங்களின் வண்ணம் தீட்டும் முறையும் பொன்னிழைகளை ஒவியத்தில் முப்பரிமாண தோற்றம் வரும்படி செய்தலும் ஒரு தனித்தன்மையாகும். பெரும்பாலான மக்கள் இவ்வோவியங்களை உருவாக்குவது மிகவும் கடினம் என்றும் செலவு அதிகமாகும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால், விலை உயர்ந்த பொருட்களுக்கு பதிலாக மலிவான பொருட்களைக் கொண்டு, மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் இவ்வோவியம் உருவாக்கும் முறையை கற்றுத்தரலாம்.

தஞ்சாவூர் ஓவியங்கள் 16, 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைந்தது. இம்மன்னர்கள் காலத்தில் தாவரப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் சாயத்தையே இவ்வோவியங்களுக்கு பயன்படுத்தினர். முக்கியமாக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணங்களை பயன்படுத்தினர். சீமை சுண்ணாம்பையும் கோந்தையும் கொண்டு முப்பரிமாண தோற்றத்தில் ஆடை அணிகலன்களை உருவாக்குகின்றனர். பிறகு கண்ணாடி கற்களை அதில் பொருத்தி பொன்வண்ண கலவையை அதில் பூசுகின்றனர்.

இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சமய சார்புடையவையாக இருக்கும். கிருஷ்ணா, யசோதா கிருஷ்ணா, ராமா, ராதா கிருஷ்ணா போன்ற இறை உருவத்தையே ஓவியமாக தீட்டுகின்றனர். மேலும், சமயச்சார்பற்ற ஒவியங்களில், இவ்வோவியங்கள் வரைய ஆதரவளித்த மன்னர்கள் மற்றும் அறிஞர்களின் ஒவியத்தையும் காணலாம். இவ்வுருவங்கள் பருத்த முழுநிறைவான தோற்றமுடையதாக இருக்கும். இவ்வகை ஓவியங்களை இரண்டு வழிகளில் செய்யலாம்.

மரப்பலகையில் ஒவியம் வரைதல்

கண்ணாடியில் ஒவியம் வரைதல்

மூலப்பொருட்கள்

மெலிதான ஒட்டுப்பலகை

அட்டை மற்றும் கென்ட் தாள்

பேப்பர் (பளப்பளப்பானது)

பொன் வண்ணத்தாள் - பச்சை மற்றும் சிகப்பு

விளம்பரத்திற்கு பயன்படுத்தும் வண்ணம் .

புருசு

பசை மற்றும் கோந்து

சீமை சுண்ணாம்பு தூள்

புளியங்கொட்டை பசை

பிரதியெடுக்கும் மைத்தாள்

கத்திரிக்கோல்

வண்ணக்கற்கள், கண்ணாடி துகள்கள், சிறு மணிகள் மற்றும் சேலை.

குழந்தைகளால் செய்யக்கூடிய வழிமுறை

இவ்வகை ஒவியங்களில் ஆடம்பர அலங்காரங்களை குறைத்து விட வேண்டும். அப்பொழுது குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொள்வார்கள். கடையில் விற்கும் பொன் வண்ணத்தாள் மற்றும் கண்ணாடி மற்றும் வண்ணக்கற்களைக் கொண்டு செய்வதால் அதிக செலவுகளை குறைக்கலாம்.

இதனால் குழந்தைகளிடத்தில் வியக்கத்தக்க செயல்திறனும், தஞ்சாவுர் ஓவியம் வரையும் முறையில் ஒரு எழுச்சியும் அவர்களை அறியாமலேயே உண்டாகும்.

ஓவியமும் வண்ணங்களும்

இராஜா ரவிவர்மாவின் ஒவியத்தின் மூலம் 1920ம் ஆண்டிலிருந்து இந்திய பாரம்பரிய ஓவியமுறை மாறுதலைடைந்து மேலைநாட்டு ஓவிய முறையும், வரைபடமும் பரவ ஆரம்பித்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியமிக்க வண்ணச்சித்திரமும் ஒவியமும் இன்றும் பல பெரிய கோயில்களில் காணப்படுகின்றன. இந்திய கலையில் மிகப்பழங்கால வரைபடத்திற்கு உதாரணமாக பாறை ஓவியங்கள் இன்றும் காணப்படுகின்றன. இருந்தபோதிலும், வரலாற்று காலத்தின் ஆரம்பத்தில் அதாவது கி.பி. 2ம் நூற்றாண்டில் அஜந்தாவில் உள்ள சாதவாகனர்களின் ஓவியம் முக்கியமாகும். தென்னிந்தியாவில் முக்கியமாக பல்லவர்கள் (7-9ம் நூற்றாண்டு), பாண்டியர்கள் (7-9ம் நூற்றாண்டு) சோழர்கள் (9 - 13ம் நூற்றாண்டு) விஜயநகரர்கள் (14-17ம் நூற்றாண்டு) மற்றும் நாயக்கர்கள் (17 – 18ம் நூற்றாண்டு) இவர்களுடைய ஆட்சி காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களே, நம் தமிழக கோயில்களில் இன்றும் காணப்படுகின்றன.

நம் மரபுவழி ஒவியங்கள் வரைய, தாவரம் மற்றும் உலோக தாதுக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாயத்தையே பயன்படுத்தினர். உதாரணமாக, செம்மண் மற்றும் நீல நிறம் கலந்த கருஞ்சாயத்தையுமே பயன்படுத்தினர். ஒவியம் வரைவதற்கு தலா (அல்லது) தாலா என்ற அளவு கோலையே பயன்படுத்தினர். தலா என்பது நெற்றிக்கும் முகவாய்க்கும் இடைப்பட்ட அளவே ஆகும். அளவு முறையை கீழே காணலாம்.

உடல்பாகம் தாலா

முடிப்பகுதி 14

முகம் 1

கழுத்து 1/4

மார்பு 1

கொப்பூழ் 1.

இடை 1

தொடை 2

முழங்கால் 14

முன்னங்கால் 2

பாதம் 1/4

மொத்தம் 9

அழகுபடுத்துவது என்பது பராம்பரிய கலைகளில் ஒரு முக்கியமான பகுதியாகும். அதற்கு நாம் சில விதிமுறைகளை கையாள வேண்டும்.

மரப்பலகை அல்லது துணி அல்லது கெட்டி மெழுகார்ந்த துணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மெழுகார்ந்த துணியின் அடிப்பாகத்தில் வெண்மை நிறத்தை பூச வேண்டும்.

அதன்பிறகு, மேலே கூறப்பட்ட அளவுகளின்படி கரித்துண்டால் வரைகோடிட வேண்டும். அதன்பிறகு அதற்கு வண்ணம் பூச வேண்டும்.

உருவ அமைப்பு கிடைத்தபிறகு அதற்கு முக்கிய கோடுகளை மட்டும் காட்டி உருகொடுத்தல் வேண்டும். புருவம் வில் போன்று அழகாக வளைந்தும், கண்கள் குவிமாடம் போன்ற வனப்பில் இருக்க வேண்டும்.

பொதுவாக, ஒவியம் முடியும் தருவாயில்தான் புருவம் தீட்டி, கண்கள் வரைந்து ஒவியத்திற்கு உயிரோட்டம் கொடுப்பது வழக்கம்.

கிராமிய நடனம் மற்றும் இசை

வில்லுப்பாட்டு தென்தமிழகத்திற்கே உரிய ஒரு சிறப்பான கலை ஆகும். இவ்வில்லுப்பாட்டை உருவாக்கியவர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசப்புலவர் என்று கூறுகின்றனர்.

பொதுவாக வில்லப்பாட்டுக்குரிய கதை, பாட்டு ஆகியவற்றை அக்குழுவின் தலைவரே உருவாக்குவார். கதை சொல்லுபவர் மேடையில் நடுநாயகமாக அமர்ந்து தன்னுடைய பக்க வாத்தியக்காரர்களுடன் பாடுகின்ற பாட்டின் பொருள் இயல்பு தொனி, பாவம் அகியவற்றிற்கு ஏற்ப விசுகோலால் வில்லினை தட்டிப் பாடுவார். இவ்வில்லுப்பாட்டின் மூலம் சமுதாய மாறுபாடு, பொருளாதார முன்னேற்றம், சமுதாய ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற கருத்துக்ககளை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளங்க வைக்க முடியும்.

கும்மி மற்றும் கோலாட்டம்

கும்மி மற்றும் கோலாட்டம் தமிழ்நாட்டில் தொன்றுத்தொட்டு நடந்து வரும் கிராமிய நடனம் ஆகும். இவ்வகை நடனமும், ஆட்டமும் பொங்கல் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். இவ்வகை நடனத்தின் அசைவுகள் வயல்வெளிகளில் அறுவடை செய்யும்போது தானியங்களில் உமி நீக்கும் போது, மேலும் வேலைகள் செய்யும் போது தோன்றியவை. கும்மி என்பது கை கொட்டியும், பாட்டுப்பாடியும் நடனமாடுவதாகும். கோலாட்டம் என்பது இரண்டு கோல்களை வைத்துக்கொண்டு தட்டி பாடலுக்கு இசைந்தவாறு தாளமும் நடனமும் மாறாமல் ஆடுவதே கோலாட்டம் ஆகும். தமிழ் கிராமிய இசைக்கேற்ப கோலாட்ட ஆசிரியர் நடனம் கற்றுத் தருவார்.

கும்மி

கும்மி என்பது “கெளம்மாய்” என்ற சொல்லிலிருந்து வந்தது. கும்மி நடனத்திற்கு பாட்டுக்கு ஏற்றவாறு கை கொட்டி நடனமாட வேண்டும். பத்து பெண்கள் புராதனமான ஆடை அலங்காரம் செய்து கொண்டு முன்னும் பின்னும் மாறி மாறியும், கை கொட்டி பாட்டு பாடிக்கொண்டு தாளம் பிசகாமல் ஆடுவர். இக்கும்மிப்பாட்டு பலவிதமான கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடழிப்பு மற்றும் தொழிலக மாசுக்கள் போன்றவையாகும்.

கோலாட்டம்

கோலாட்டம் என்ற வார்த்தை கோல் ஆட்டம் என்ற வார்த்தைகள் சேர்ந்து வந்ததே கோலாட்டம். தமிழ்நாட்டில் கோலாட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வகை ஆட்டம் பொதுவாக பொங்கல் திருவிழா காலங்களில் நடைபெறும்.

கோலாட்டத்தில் பத்து பெண்கள் பங்கு கொண்டு ஒரு கையில் ஒரு கோலையும், மற்றொரு கையில் ஒரு கோலையும் வைத்துக் கொண்டு தாளம் பிசகாமல் தாய்நாட்டின் பெருமையைப் பாடுவார்கள். கோல்களை மாறி மாறி அடித்து ஆடுவதால் உண்டாகும் இசை மிகவும் இனிமையாக இருக்கும். கோலாட்டம் ஆடும்பொழுது தென்னிந்தியாவிற்கே உரிய உடை அணிகலன்களை அணிந்திருப்பர்.

நதி ஆட்டம்

இது ஒரு வகை கிராமிய நடனம் இதில் எட்டு பெண்களும், இரண்டு ஆண்களும் சேர்ந்து தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப நடனமாடுவார்கள் மலையிலிருந்து நதி உற்பத்தியாகி காட்டின் மேடு பள்ளங்கள் வழியாக வந்து நிலத்தில் பாய்ந்து வயல்களுக்கு வந்து சேர்வதை ஆட்டத்தின் மூலம் தெரியப்படுத்துவது. மேலும் இந்த ஆட்டக்காரர்கள் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நிலத்திற்கும், ஏரி, குளங்களை நிரப்பியும், தொழிற்சாலைகளுக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்றும் இறுதியில் கடலோடு சேர்வதையும் நாட்டியத்தின் மூலம் தெளிவுப்படுத்துவர்.

உழவர் ஆட்டம்

இவ்வகை ஆட்டம் முற்றிலும் கிராமிய நயமுள்ள சார்ந்த விவசாய மக்களின் தொழிலைக் குறித்து ஆடுவது ஆகும். ஏர் உழுதல், விதை விதைத்தல், அறுவடை செய்தல் மற்றும் உமி நீக்கி தானியத்தை சேகரித்தல் போன்றவற்றை ஆட்டத்தின் மூலம் விளக்கிக் காட்டுவது ஆகும். இக்கூத்துக்கு மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் வட்டமாக நின்று இசைக்கேற்ப ஆடுவர். இவ்வாட்டத்தில் ஆடுபவர்கள் கிராமிய உடை அணிகலன்கள் அணிந்து ஆடுவர்.

தேவராட்டம்

தேவராட்டம் சங்க இலக்கியத்தில் "முனிதேர் குரவை என்று காணப்படுகின்றது. அரசர் செல்லும் ரதத்திற்கு முன்னால் விரத்தன்மையோடு ஆடும் ஆட்டம் இது சிவ பார்வதியின் திருமணத்தின் போது நந்தி தேவன் இசைக்க அதற்கேற்ப தேவர்கள் நடனம் ஆடினர் என்று புராணம் கூறுகிறது. மேலும், சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தின் போது அவரை அமைதிப்படுத்த தேவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடினர் என்பர். தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் இதற்கு தேவராட்டம் என்றழைக்கப்படுகிறது.

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் என்றும் ஒயில் கும்மி என்றும் சொல்லப்படும் இந்த ஆட்டத்தை ஆண்கள் ஆடுவார்கள் இவர்கள் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டும் இடுப்பில் கருப்பு நிற துணியைக் கட்டிக்கொண்டும் கால்களில் சலங்கைகள் அணிந்தும், கைகளில் ஒரே நிறத்திலான சிறு துணியை வைத்துக் கொண்டு ஆடுவார்கள்.

ஒயிலாட்டம் ஆடுபவர்கள் பார்வையாளர்களை நோக்கி நேராகவும் நான்கு கோணங்களில் மாறிமாறியும் ஆடுவார்கள். இந்த ஆட்டக்காரர்களின் தலைவன் அண்ணாவி’ பாட்டு, இசை மற்றும் அதற்கேற்ப நடனத்தையும் சக ஆட்டக்காரர்களுக்கு கற்றுத்தந்து முன்னின்று ஆடுவார். பெரும்பாலும் ஒயிலாட்டம் கணபதி, சரஸ்வதி, கிராம தேவதைகள்பற்றி துதிபாடல்கள் பாடுவது வழக்கம் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை சொல்லியவாறு ஆடுவது மரபு.

காவடி ஆட்டம்

அரைவட்டமாக வளைக்கப்பட்ட மரக்கட்டையை ஒரு கோலின்மேல் பொருத்தி செய்யப்படுவதே காவடியாகும். இதை மயிலின் இறகுகளினால் அலங்கரித்து தோளில் சுமந்து செல்வர். காவடியெடுத்தல் பெரும்பாலும் முருகப்பெருமானுக்கு வேண்டுதல் பொருத்து பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடுவர். அசுரனாகிய இடும்பனை வெற்றி கொண்ட முருகன், இடும்பனை மலையை தூக்கிச்செல்லுமாறு சொல்ல இடும்பன், மலையை காவடி போல் கட்டித்தூக்கி வந்து, முருகனுடைய அனுக்கிரகங்களைப் பெற்றான். இதன் அடிப்படையிலேதான் பக்தர்கள் காவடி சுமந்து செல்வது வழக்கமாயிற்று.

பெண்கள் கும்பலாக சேர்ந்து மஞ்சள் கயிறு மற்றும் மாலைகளால் அலங்கரித்துக் கொண்டு கால்களில் சலங்கைகள் கட்டிக்கொண்டு கழுத்தில் காவடியை சுமந்து கொண்டு, காவடி சிந்துவுக்கு ஏற்ப தாரை தப்பட்டை குழல் மற்றும் கொம்பு முதலிய வாத்தியங்கள் முழங்க வேகமாக ஆடிவருவர்.

சில பக்தர்கள் காவடியை தன் தலையிலும், கழுத்திலும், தோளிலும் உருளுமாறு நடனம் ஆடிச்செல்வர். காவடியை தொடர்ந்து வருபவர்களும் காவடி சிந்துவைப் பாடி வருவார்கள். எளிய சொற்களால் அமைந்த காவடிச்சிந்து கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

கரகாட்டம்

கரகாட்டம் என்பது குடம் ஒன்றில் நீர் நிரப்பி, தேங்காய் வைத்து மூடியிருப்பார்கள். சந்தனம், வேப்பிலை, பூமாலை, எலுமிச்சம்பழம் ஆகியவற்றால் அலங்கரித்து தலைமேல் வைத்துக்கொண்டு விழுந்துவிடாமல் ஆடுவதாகும். பொதுவாக ஊரில் நோய் வந்துவிட்டால் இவ்வகைக் கரகங்களைப் பலபேர் எடுத்து கொண்டு தெருத்தெருவாக ஊர்வலம் வருவார்கள். இவ்வகை கரகம் எடுப்பவர்கள் குளித்து, குங்குமம், விபூதி அணிந்து பக்தியோடும் சுத்தமாக இருப்பர்.

மற்றொரு வகை விழா காலங்களில் பொழுதுபோக்கிற்காக ஆடப்படுகிற கரகம். இதற்கு இரண்டு பெண்கள் பளபளக்கும் ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்து தாளத்திற்கேற்ற பாட்டுடன் வேகமாக குடம் விழுந்து விடாமல் ஆடுவர். இந்த ஆட்டத்தின் வேகத்தை கண்டு பார்ப்பவர்கள் ஈர்க்கப்பட்டு மேளவாத்தியத்திற்கு ஏற்ப ஆண், பெண், குழந்தைகள் எல்லோரும் ஆடுவர்.

முழுமுதற் கடவுள் பிள்ளையாருக்காக ஆடப்படும் கரகாட்டம் இளவயது ஆண் மகனால் கிராமிய பாட்டுடனும் தவில் நையாண்டி மேளம் மற்றும் நாதசுர இசையுடன் ஆடப்படுகிறது.

கரகம் ஆடும் ஆண்கள், தன் உடல் முழுவதும் திருநீறும் சந்தனமும பூசிக்கொண்டு கால், கை, காது, கழுத்து ஆகிய பகுதிகளை மினுமினுக்கும் ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு ஆடுவார்கள். குடத்தின் மேல் கூம்பு வடிவில் ஒரு சட்டம் அமைத்து அதை பூக்களால் அலங்கரித்து தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள் பக்கவாத்தியங்களின் முழக்கத்திற்கேற்ப, கரகம் ஆடுபவரின் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். அவன் எப்படி தலைகீழாக ஆடினாலும் தலையில் இருக்கும் கரகம் கீழே விழாது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதாரம் : சி.பி. ராமசாமி ஐயர் பவுண்டேசன்