தேசிய திரைப்பட விருதுகள் தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards), சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கௌரவமாகும். 1954-ல் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விருதுகள் இந்தியத் திரைப்படத் துறையில் மிகச்சிறந்த படைப்பு, தொழில்நுட்ப சாதனைகளை அங்கீகரித்து வருகின்றன. இவை முழு நீளத் திரைப்படங்கள், பகுதி முழு நீள திரைப்படங்கள், சினிமா குறித்த எழுத்து என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. 72-வது தேசிய திரைப்பட விருதுகள், 2024-ம் ஆண்டிற்கான இந்தியத் திரையுலகச் சாதனைகளைக் கௌரவிக்கின்றன. மூன்று நடுவர் குழுக்களின் தலைவர்களால் 18 ஜூலை 2026 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் 22 செப்டம்பர் 2026 அன்று குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் விருதுகளை வழங்குகிறார். இந்த விருதுகள், நாடு தழுவிய திரைப்படத் துறையின் செழுமையான மொழி, கலாச்சார, பிராந்தியப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றன. அவை பெரிய வணிகத் தயாரிப்புகளையும் சிறிய திரைப்படங்களையும் ஒரே தேசிய தளத்தில் ஒன்றிணைக்கின்றன. இந்தப் பரந்த தன்மையே, திரைப்படத் தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் மத்தியில் இந்த விருதுக்கு அதன் மதிப்பை அளிக்கிறது. ஒரு முக்கிய கொள்கை முடிவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விருது வழங்கும் விழாவை நடத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இனிவரும் விழாக்ககள் தேசியத் தலைநகர் தில்லியைத் தாண்டி வெவ்வேறு மாநிலங்கள், நகரங்களிலும் நடத்தப்படும். ஏக்தா நகரில் நடைபெறும் விழா, இந்தியா முழுவதிலுமிருந்து திரையுலகக் கலைஞர்களை ஒன்றிணைக்கும். இது ' ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வைப் பிரதிபலிக்கும். இந்திய சினிமாவின் பயணம் இந்திய சினிமாவின் பயணம் 1913-ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கேவின் ' ராஜா ஹரிச்சந்திரா' திரைப்படத்துடன் தொடங்கியது . 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்ட திரைப்பட ஆய்வுக் குழு, 'திரைப்படங்களுக்கான மாநில விருதுகளை' நிறுவுமாறு பரிந்துரைத்தது. இந்திய சினிமாவில் உள்ள கலை, தொழில்நுட்பச் சிறப்புகளைக் கௌரவிக்கவும் ஊக்குவிக்கவும் இந்த விருதுகள் உருவாக்கப்பட்டன. இந்த விருதுகள் 1954-ம் ஆண்டு நிறுவப்பட்டு, அதன் முதல் பதிப்பு 1953-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களைக் கௌரவித்தது. 1967-ம் ஆண்டு திரைப்படங்களுக்காக, கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விருதுகள் தனித்தனியாக நிறுவப்பட்டன. தாதாசாகேப் பால்கே விருது 1969-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, முதன்முதலில் தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகளின் நோக்கங்கள் அதிகாரப்பூர்வ விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அழகியல், தொழில்நுட்பச் சிறப்பு, சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களின் கலாச்சாரங்களைப் பார்வையாளர்கள் புரிந்துகொண்டு பாராட்டுவதற்கு அவை உதவுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், இந்த விருதுகள் தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்துகின்றன. இந்த விருதுகள், சினிமாவை ஒரு கலை வடிவமாகப் பயில்வதையும் பாராட்டுவதையும் மேலும் ஊக்குவிக்கின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312645®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்