அறிமுகம்

உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் அன்று உலக செவிலியர் தினத்தை உலக செவிலியர் பேரவை கொண்டாடுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளுக்கு வெவ்வேறு கருத்து வாசகம் அமைகிறது.

சுகாதாரம் ஒரு மனித உரிமை

செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பணிபுரிகிறார்கள். சுகாதாரத்துக்கான உரிமை அவர்களுக்கும் உரியதே. தகுந்த பணிச்சூழல் சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைவதைப் பொறுத்தே நோயாளிகளுக்குப் பராமரிப்புத் தரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். அதாவது பாதுகாப்பானப் பணிச்சூழல், போதுமான ஊதியம், மற்றும் கல்வி ஆகியவை சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பது இதன் அடிப்படை. கொள்கை முடிவெடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் செவிலியர்கள் பங்கு பெற வேண்டும் என்பதையும் அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்பதையும் உலக செவிலியர் தினம் முன்னெடுத்துச் செல்கிறது.

“ஒருவரையும் விட்டுவிடாதவாறு செவிலியர்கள் எவ்வாறு சுகாதரப் பராமரிப்பையும் அமைப்பையும் மாற்றி வருகிறார்கள் என்பதையும் சுகாதாரக் கொள்கை, திட்டமிடல், வழங்குதல் ஆகியவற்றில் நமது குரல் கேட்கப்பட வேண்டும் என்பதையும் இந்தச் செவிலியர் தினத்தில் நாம் ஒன்றிணைந்து அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

முக்கிய உண்மைகள்

உலகின் மொத்த சுகாதாரப் பணியாளர்களில் 50% செவிலியரும் மருத்துவப் பணிப்பெண்களும் ஆவர்.

உலக அளவில் சுகாதாரப் பணியாளர்கள் குறைவு படுகின்றனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் செவிலியர் மற்றும் மருத்துவப் பணிப்பெண் குறைபாடு உள்ளது.

நிலைத்த வளர்ச்சி இலக்கு 3 - ஐ அடைவதற்கு 2030-க்குள் உலக அளவில் 90 லட்சம் செவிலியர்களும் மருத்துவப் பணிப்பெண்களும் தேவைப்படுகின்றனர்.

சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோய்த் தடுப்பிலும், ஆரம்ப சுகாதாரம் மற்றும் சமுதாய பராமரிப்பிலும், அவசர நிலை அமைப்பிலும் செவிலியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி பெறுவதற்கு அவர்களே முக்கியமானவர்கள்.

சமுதாயத்திலும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளிலும் செவிலியர்கள் ஆற்றும் பங்கு பலதிறப்பட்டன. தனிநபர் பராமரிப்பு, சிகிச்சை மேலாண்மை, குடும்பங்களோடும் சமுதாயத்தோடும் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். பொது சுகாதாரத்திலும் நோய்களையும் தொற்றுகளையும் தடுப்பதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சுகாதாரத்தை மேம்படுத்துதல், நோய்களைத் தடுத்தல், நோயாளிகள், ஊனமுற்றோர், மரணப்படுக்கையில் இருப்போர் ஆகியோரைப் பராமரித்தல் இதில் அடங்கும்.

அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு செவிலியரின் துணையோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் சுகாதாரத் தேவைகளை சந்திக்க செவிலியர் ஆற்றும் சேவைகள் இதற்கு உறுதுணையாக இருக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்