சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா தொழில் துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) தனது பிளாட்டினம் விழா ஆண்டில் தேசிய அளவில் எடுத்த மிக முக்கியமான முயற்சி மாணவர்களையும் விஞ்ஞானிகளையும் இணைக்கும் சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா (CSIR Jigyasa) திட்டமாகும். சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா மெய்நிகர் ஆய்வகம் சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான இந்தியாவின் முதல் மெய்நிகர் ஆய்வகத்தை (Virtual Lab) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science & Technology) தற்பொழுது தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் மாணவர்களை இணைக்கும் ஒரு தளமாகும். சிஎஸ்ஐஆர் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை (IIT Bombay) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா மெய்நிகர் ஆய்வகம் (CSIR Jigyasa Virtual Lab) உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இலக்கு மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை (11-18 வயது) பயிலும் மாணவர்களாகும். அறிவியல், கணிதம், உயிரியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பல்வேறு செயல்பாடுகள் வாயிலாகவும், அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் வாயிலாகவும் அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தரமான ஆராய்ச்சிகள் பற்றி அறியச் செய்தல் மற்றும் புதுமையான கற்றல் முறைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவது மெய்நிகர் ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும். ஆர்வத்தைத் தூண்டும் ஆராய்ச்சி கருத்துக்களைக் கற்றல், உயர் வரிசை சிந்தனைத் திறனை ஊக்குவித்தல் (Higher Order Thinking Skills), தொழில்முனைவுத்திறனை (Entrepreneurship) அதிகரித்தல், அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்தல் ஆகியவை சிஎஸ்ஐஆர் மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் சாத்தியமாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் சென்று காண முடியாத சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களை மெய்நிகர் சுற்றுப்பயணம் (Virtual Tour) மூலம் கண்டு ஆராய்ச்சிக் கூடங்களின் உள்கட்டமைப்பை அறிந்துகொள்ளும் வாய்ப்பை இத்தளம் வழங்கும். மாணவர்கள் விஞ்ஞானிகளிடம் உரையாடி அவர்களது கருத்துக்களை அறியவும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும் இத்தளம் உதவும். சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் மற்றும் பிற பங்குதாரர்களால் வழங்கப்பட்டுள்ள பரிசோதனைகள் மற்றும் பிற செயல்பாடுகள் வாயிலாக ஆர்வத்துடனும் வேடிக்கையாகவும் கற்றுக்கொள்ள உதவும் எழுச்சியூட்டும் அறிவியல் ஆய்வகமாக இத்தளம் இருக்கும். தற்பொழுது ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐஆர் மெய்நிகர் அறிவியல் ஆய்வகம், இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளிலும் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆதாரம்: சிஎஸ்ஐஆர் மெய்நிகர் அறிவியல் ஆய்வகம்