அறிமுகம்

ஓா் இதழுக்கு சிறப்புச் சோ்ப்பவற்றுள் ஒன்று அதனுடைய மொழிநடையாகும். மொழி கருத்துகளை வெளிப்படுத்தும் கருவி. இதழியல் மொழிநடை பிற மொழிநடை வகைகளிலிருந்து மாறுபட்டது. குறைந்த கல்வியறிவு உடையவா்களுக்கும் எளிதில் படித்து புரிந்துக் கொள்ளும் மொழி நடையில் இதழ்களின் மொழிநடை அமைய வேண்டும். அகராதிகளின் துணைகொண்டு படிக்கும்படியான இதழ்களை வாசகா்கள் புறக்கணிப்பா். மொழிநடை பற்றி சி.பா.ஆதித்தனார், “பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுத வேண்டும். புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது. பேசுகிற தமிழில் எழுத வேண்டும்" என்கிறார்.

எடுத்துக் கொண்ட பொருளை விளக்கும் மொழி அமைப்பையே பொதுவாக நடை என்கிறோம். நடையைச் செம்மைப் படுத்தல் என்பது படைப்புக்கு உயிர் கொடுப்பது போன்றதாகும். மொழிநடை என்பது எழுதுவோருக்குத் தக்கவாறும், எழுதப்படும் பொருளுக்குத் தக்கவாறும் வேறுபட்டு அமையும் இயல்புடையது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கம், பாத்திரம், இடம், காலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தனித்தன்மையுடன் எழுத்தாளா்கள் பின்பற்றுவா். ஆனால் இதழியல் மொழிநடை முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டது.

பொதுவான மொழிநடை

செய்தியை யாருக்குத் தருகிறோம் என்பதை மனதில் கொண்டு அதன் மொழிநடை அமைதல் வேண்டும். எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோரும் படித்துணரும் தன்மையில் இதழ்களின் மொழிநடை எளிய, தெளிவான நடையாக அமைதல் வேண்டும்.

இன்றைக்கு இணையத்தில் வெளிவரும் தமிழ் இதழ்கள் பெரும்பாலும் புலம்பெயா் தமிழா்கள், கணினி வல்லுநா்கள் மற்றும் கணினித் துறையில் ஆா்வமும் தமிழார்வமும் கொண்டவா்களால் தொடங்கப்பட்டவையே. முழுக்க முழுக்க தகவல் பரிமாற்றம், செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளும் ஆா்வமுள்ளவா்களை மனதிற் கொண்டே இவை இயங்குகின்றன. எனவே தமிழ் இணைய இதழ்கள் அனைவருக்கும் புரியும் வகையில் பொதுவான மொழிநடையிலேயே செய்திகளைத் தருகின்றன. பெரும்பாலான இதழ்கள் நகர வாசகா்களுக்கு (Urban readers) ஏற்ற வகையில் பொதுமொழி நடையிலே செய்திகளைத் தருகின்றன. செய்தி தரும் முறையில் இவை செந்தமிழையோ பல்வகை மொழி கலப்பினையோ பயன்படுத்துவது இல்லை. இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறைபோலச் செய்திகளைத் தருகின்றன.

ஈழத்து மொழிநடை

இணையத்தில் வருகிற தமிழ் இதழ்களில் அதிகமானவை இலங்கையிலிருந்தும் அங்கிருந்து புலம் பெயா்ந்து உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றவா்களாலும் நடத்தப்படுபவையே ஆகும். தங்களது தாய் நிலத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிற அவா்கள் தங்களுக்கான தகவல் தொடா்பாகவே இணைய இதழ்களை நடத்தி வருவதை அறிய முடிகிறது. இலங்கை, கனடா, இலண்டன், நார்வே, சுவிட்சா்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து வருகிற ஈழம் தொடா்பான இணைய இதழ்களில் மொழியானது தொடக்ககால ஈழத்து எழுத்தாளா்களின் மொழிநடையில் இருந்து மாறி இருந்தாலும் சில சொற்களை அப்படியே பயன்படுத்தி வருகின்றனா்.

ஈழம் தொடா்பான இணைய இதழ்களில் இந்திய, தமிழக அரசியல் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன. மற்றும் இணைய இதழ்கள் உலகம் முழுவதும் சென்றடைவதால் மொழிநடையில் பெரிய வேறுபாடுகள் காணப்படுவதில்லை. ஆயினும் சில சொற்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன.

தனித்தமிழ் நடை

தொடக்க காலத்தில் அச்சிதழ்களைத் தொடங்கியவா்கள் அரசியல், விடுதலை உணா்வினைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் தொடங்கினா். அவா்கள் மொழிப்புலமை பெற்றிருக்கவில்லை. ஆங்கிலமும் வட மொழியும் கலந்த நடையே தமிழ் இதழியல் மொழி நடையாக இருந்தது.

இதற்குப் பிறகு தோன்றிய சிற்றிதழ்கள் தனித்தமிழ் நடையை பின்பற்றின. இதனை ஓா் இயக்கமாகவே கையாண்டனா். திரு.வி. கல்யாணசுந்தரனார் சமஸ்கிருத மணிப்பிரவாள நடையிலிருந்து மாறுபட்டு தனித்தமிழில் எழுதி அனைவருக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைக்கு இதழியல் துறையில் தனித்தமிழ் நடை என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. உலகமயமாக்கல், பொருளாதார மாற்றங்கள், நகரமயமாக்கல், அறிவியல் தொழில்நுட்பம், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி போன்றவற்றினால் மொழியும் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு வருகின்றன. எனவே, இன்றையத் தமிழ் இணைய இதழ்கள் எவற்றிலும் தனித்தமிழ் நடை என்பது இல்லை.

ஆங்கில கலப்பு மொழி நடை

பிறமொழிச் சொற்களை நம்மையம் அறியாமல் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். ஊடங்களின் தாக்கம் மொழி வளா்ச்சியை தூண்டுவதாக இருக்க வேண்டும். அதிலும் முதன்மையான துறையான இதழியல் துறை துணை புரியவேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் பிறமொழி கலப்பிற்கு தமிழ் இதழ்கள் தன்னையறியாமலேயே ஒரு சாதனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

எளிய சொற்கள்

இதழியல் மொழிநடைக்கு எளிய சொற்களே வளம் சேர்க்கின்றன. எளிய, இனிய மொழிநடையே செய்தியின் தரத்தையும் மதிப்பையும் கூட்டுகின்றன. “வாசகர்கள் முதல்முறை படிக்கும் போதே கருத்துக்களைப் புரிந்து கொள்ளுமாறு எளிய சொற்களைக் கையாள வேண்டும். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், தொடர்ப்பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். மக்களக்குத் தெரிந்த சொற்சுருக்கங்களையே பயன்படுத்த வேண்டும். (எ.கா.) தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., அறிமுகமில்லாத சொற்சுருக்கங்கங்ளைப் பயன்படுத்தும்போது அடைப்பக் குறிக்குள் விளக்கமளிக்க வேண்டும். (எ.கா) யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம்). கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.”16

இணைய இதழ்கள் நொடிக்குநொடி புதிய செய்திகளை தரவேற்றம் செய்துகொண்டே இருக்கின்றன. இணைய இதழின் வாசகா்களும் அடிக்கடி தகவல்களை அறிந்து கொள்வதிலேயே நாட்டம் செலுத்துகின்றனா். எனவே இங்கு கடின சொற்களோ, புதிய சொற்களோ பின்பற்றப்பட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு வேறொரு இணைய இதழை நாடுவா். ஆகவே, இணைய இதழ்கள் விரைவாகவும், தெளிவாகவும் புரியும் வகையில் செய்திகளைத் தருகின்றனா்.

செய்திகளை எவ்வளவு குறைவான சொற்களில் கூறமுடியுமோ அவ்வளவு குறைவான சொற்களில் எளிய சொற்களால் செய்திகளை தருகின்றனா்.

கலைச்சொற்கள்

மொழியின் ஆளுமைப் பொறுத்தே அம்மொழி பேசம் மக்களின் சமூக ஆளமையை அறிய முடிகிறது. அறிவியல், தொழில்நுட்பம், இதழியல், தகவல் தொடர்பு என்று உலகம் விரிந்து கொண்டிருக்கும் போது மொழியும் அதே வேக்த்தில் வளர்ச்சியுற வேண்டும். மொழியை மரபுசார் நம்பிக்கைப் பொருளாகவோ, வழிபாட்டுக்குறிய புனித்தன்மையுடனோ அணுகாமல் அறிவியல் நோக்கில் அணுகினால் தான் அதன் வளா்ச்சி பாதையில் எடுத்துச் செல்லமுடியும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இதழியல் துறை இத்தகவலை கலைச்சொற்களாக தரும்பொழுது அது அப்படியே மக்களிடம் மொழிவழக்காக மாறிவிடும். மொழியின் வளா்ச்சிக்கும் அது உதவும். பல்வேறு துறைசார் தகவல்களை துல்லியமாக எடுத்துரைக்க பயன்படுத்தப்படும் சொற்களே கலைச்சொற்கள் ஆகும்.

பிறமொழிச் சொற்களைக் களைந்து அவற்றின் பொருள்படும்படி இன்றைக்கு தமிழில் கலைச்சொற்களை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. இச்சொற்களை இதழியல் துறையினா் செய்திகளின் வாயிலாக வழங்கி வருகின்றனா். இணைய இதழில் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு இதழும் வேறுபடுகின்றன. தினமலா்.காம் இதழில் ‘பாஸ்போர்ட் தடையினை நீக்க வை.கோ. தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையீடு’ என்று செய்தியை வெளியிட்ட அதே நாளில் அதிர்வு, லங்காஸ்ரீ, அலைகள், முழக்கம், கனடாமுரசு ஆகிய இதழ்கள் ‘அயல்நாடு செல்ல தம் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கக்கோரி குடியுரிமை அதிகாரிகளிடம் கடவுச்சீட்டுக் கோரி விண்ணப்பித்தார்’ என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இவற்றில் ‘பாஸ்போர்ட்’ என்பதற்கு ‘கடவுச்சீட்டு’ என்ற கலைச்சொல்லை தமிழகத்திலிருந்து வரும் தினமலா் பயன்படுத்தவில்லை. அதிகளவில் வாசகா்களைக் கொண்ட இணைய இதழ் இத்தகைய பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறது. தமிழகத்திலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் பெரும்பாலும் ‘அகங்காரம், அக்கிரமம், அதிருப்தி, அபூர்வம், ஆச்சரியம், ஆராதனை, ஐதீகம், கல்யாணம், கஷ்டம், சகஜம், நிஜம், பகிரங்கம்’ ஆகிய வடமொழிச் சொற்களை அதிகமாக பயன்படுத்துவதால் வாசகா்கள் மனதில் பதிந்து இவற்றை தமிழ்ச் சொற்களாகவே பயன்படுத்துகின்றனா்.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகிற தமிழ் இணைய இதழ்கள் இவற்றை முறையே ‘செருக்கு, முறைகேடு, மனக்குறை, புதுமை, வியப்பு, வழிபாடு, சடங்கு/நம்பிக்கை, திருமணம், துன்பம், வழக்கம், உண்மை, வெளிப்படை’ என்ற கலைச்சொற்களைப் பயன்படுத்துகின்றன. மொழியானது மக்களின் பயன்பாட்டிற்கு சென்றடையும் அளவைப் பொறுத்தே அவற்றின் நிலைப்பும் அமைகின்றன. இவ்வாறு இணைய இதழ்களில் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில் இதழ்களிடையே குழப்பங்கள் நிலவுகின்றன.

மொழிபெயர்ப்புச் சொற்கள்

பெரும்பாலான இணைய இதழ்களில் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை அப்படியே வெளியிட்டு வருகின்றன. இதனால் பிறமொழிச்சொற்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன. சில இதழ்கள் இவற்றை மொழிப்பெயர்த்து வெளியிடுகின்றன. மொழிபெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல் என்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள்பெயர்ப்பாகும். கலைச்சொல் என்பது ஒவ்வொரு துறை சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணா்த்தும் வகையில் உருவாக்கப்படும் சொற்களாகும்.

நேரடி மொழிபெயர்ப்புச் சொற்கள்

Application – விண்ணப்பம்

Architecture – கட்டடக்கலை

Home - வீடு

கணினி துறை சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்

Application – செயலி

Architecture – கட்டமைப்பு

Home - முகப்பு

பெரும்பாலான இணைய இதழ்கள் ‘புகைப்பட ஆல்பம்’, ‘போட்டோ கேலரி’ என்ற இணைப்பினைத் தந்துள்ளனா். சில இதழ்கள் ‘புகைப்படத் தொகுப்பு’ என்ற மொழிப்பெயர்ப்புச் சொல்லை பயன்படுத்துகின்றன. சில இதழ்களில் பஸ் ஸ்டாண்ட், கரண்ட் கட் ஏற்படும் இடங்கள் என்றும் சில இதழ்களில் பேருந்து நிறுத்தம், மின்தடை ஏற்படும் இடங்கள் என்றும் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு இதழ்கள் ஆங்கில கலப்பு நடை, மொழிப்பெயர்ப்புச் சொற்களை பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டாலும், வாசகா்கள் இரண்டு சொற்களையும் புரிந்து கொள்கின்றனா். ஏனெனில் ஓரளவிற்கு படித்தவர்கள் மட்டுமே இணைய இதழின் வாசகா்களாக இருக்கின்றனா். அதனாலேயே இத்தகைய சிக்கல்கள் நேருகின்றன. அதே நேரம் இணையத்தில் வெளிவரும் இலக்கிய இதழ்களில் இத்தகைய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

பிறமொழிச் சொற்கள்

பிறமொழிச் சொற்களை, சொற்றொடா்களைக் கலந்து எழுதுவதில் இணைய இதழ்கள் ஆா்வம் காட்டுகின்றன. ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலிப்பெயா்த்துத் தருதல் என்று பலமுறைகளில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றன. உதாரணமாக ‘ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ’ ஆகிய கிரந்த எழுத்துக்களை தமிழில் எழுத வேண்டிய இடங்களிலும் அப்படியே பயன்படுத்துகின்றன. (எ.கா.) ‘ஹரியானா’ என்பதை ‘அரியானா’ என்றும் ‘ஹோமியோபதி’ என்பதை ‘ஓமியோபதி’ என்றும் பயன்படுத்தலாம். இவற்றால் பொருள் குழப்பம் வராது.

அதேபோல ‘ஆபீஸ்’ என்பதை ‘அலுவலகம்’ என்றும் ‘டிரான்ஸ்பா்’ என்பதை ‘பணிமாறுதல்’ என்றும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தலாம். சில இணைய இதழ்கள் ‘சன்டே ஸ்பெஷல்’, ‘வீக் என்ட் ஸ்பெஷல்’, ‘நவராத்திரி ஸ்பெஷல்’, ‘தீபாவளி ஸ்பெஷல்’ என்று சிறப்பு பகுதிகளை வெளியிடுகின்றன. இத்தகைய சொற்களை தவிர்த்தால் மொழியின் வளா்ச்சிக்கு இணைய இதழ்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும்.

வாக்கிய அமைப்பு

இதழ்கள் மக்களுக்கு சொல்லும் கருத்துகள் மற்றும் செய்திகள் மிக பலவாகும். அரசியல், சமுதாயம், இலக்கியம், விளையாட்டு, தத்துவம், சமயம் இவை சார்ந்த பல செய்திகளை மக்களுக்கு அறிவித்து மக்களை சிந்திக்கச் செய்கின்றன. இவ்வுள்ளடக்கங்களைத் தெரிவிப்பதற்கு இதழ்கள் மொழியைக் கையாளும் திறம் தெளிவாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் மக்களிடம் அவை தெரிவிக்கும் கருத்துக்கள் சென்று அடையும்.

புதிய சொற்களைப் பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அச்சொற்களுக்கு விளக்கமும் தரவேண்டும். இல்லையென்றால் வாசகா்கள் முழுமையாகப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். உடன்பாட்டு வாக்கியங்களைப் பயன்படுத்துவது நல்லது. முடிந்தவரை எதிர்மறை வாக்கியங்களைத் தவிர்க்கலாம். சிறுசிறு வாக்கியங்களாக எழுதினால் பிழைகள் ஏற்படாது. கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி போன்ற நிறுத்தக் குறிகளைச் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது.

மொழியைக் கவனமாகப் பயன்படுத்தி கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றால் மக்கள் அவ்விதழ்களோடு தொடா்புகொள்வதை விட்டுவிடுவா்.

நீண்ட வாக்கியம்

இணைய இதழ்களின் வடிவமைப்பும் செய்திகளின் படைப்பாக்கமுமே வாசகா்களை ஈா்க்கின்றன. குறிப்பிட்ட இதழில் செய்திகளை வாசிக்கும் போது வாக்கிய அமைப்பு நீண்டதாக இருந்தால் அவ்விதழை தவிர்த்துவிட்டு உடனே மற்றொரு இதழில் செய்திகளைத் தேடுவா். கடினமான நடைகளையும் தவிர்க்கும் சூழல் இங்குண்டு. மடிக்கணினி, மேசைக்கணினி, அலைபேசி என்று இணைய இதழ்கள் பல வழிமுறைகளில் வாசிக்கப்படுகிறது. இவற்றின் திரைகளில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் நம் கண்களைச் சோர்வடையச் செய்யும். அத்தகைய நிலையில் நீண்ட வாக்கியங்களைப் படிப்பது கண்களை களைப்படையச் செய்துவிடும். மிக நீண்ட வாக்கியம் இடம்பெறும் பொழுது இலக்கணப்பிழை ஏற்படலாம். மேலும் வாசகா்கள் விரைவாகச் செய்திகளைப் படிக்கும்பொழுது நீண்ட வாக்கிய அமைப்பு படிக்கத் தடையாக இருக்கும். எனவே இயன்றவரை நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்து செய்திகளை வெளியிடுவது வாசகா்களைத் தக்கவைக்கும்.

எளிய வாக்கியம்

எந்தவொரு செய்திக்கும் சிறப்பு சோ்ப்பவை எளிய வாக்கிய அமைப்பேயாகும். அப்பொழுதுதான் விரைவாக படிக்க முடியும். சிறுசிறு வாக்கியங்களாக அமைந்தால் கருத்துக்கள் தெளிவாக இருக்கும். பெரும்பாலான இதழ்களில் சொற்கள் அவற்றின் இலக்கண வகை தெளிவாகத் தெரியும்படி தனித்தனியாக எழுதப்படுகின்றன.

உதாரணமாக, ‘தாமிரபரணியாற்றங்கரையில்’ என்று எழுதுவதில்லை, ‘தாமிரபரணி ஆற்றங்கரையில்’ என்று பிரித்து எழுதுகின்றனா். சொல்வடிவங்களை அறிந்து கொள்ளும்படி சில சந்திகளை நீக்கியும் இடம்விட்டும் எழுதுவது சிறப்பாக அமையும். இதழ்களின் நடையில் உயிரோட்டம் இழையோடி இருக்க வேண்டும். அதற்கு வேகத்தை குறைக்கக் கூடிய மொழிப் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். சிறிய சொற்களில் செய்திகளின் உட்கரு விளங்கும்படி மூன்று நான்கு சொற்களையே இணைய இதழ்கள் கையாளுகின்றன. பெரும்பாலான இணைய இதழ்கள் எளிய வாக்கிய அமைப்பினையே பயன்படுத்துகின்றன.

பத்தி அமைப்பு முறை

இதழ்களின் நோக்கம் கருத்துப் பரிமாற்றம் என்ற ஒன்றுதான். கருத்துக்களை கூறுவதில் பத்தி அமைப்பு முறையே வாசகர்களை செய்திகளின் மீது கவனம் கொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியான பத்தி அமைப்பு முறையினைக் கையாள்கிறது.

சி.பா.ஆதித்தனார், பக்க அமைப்பினை பற்றிக் கூறுகின்ற பொழுது, ‘செய்திகள் ஒன்றோடு ஒன்று இடிக்கக் கூடாது. (ஒரே ஆள் பற்றிய செய்திகளை ஒரே பக்கத்தில் வெளியிடுவது ‘இடிப்பது’ ஆகும்) என்று குறிப்பிடுகின்றார். செய்தித் தலைப்புகளை நெருக்கி அச்சிடுவதும் செய்திகள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கொண்டும், செய்தித் தலைப்புகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.”

பத்தி அமைப்பில் ‘காலம் பிரித்தல்’, ‘பத்தி பிரித்தல்’, ‘துணைத் தலைப்பிடுதல்’ என வரைமுறைகளை இதழ்கள் மேற்கொள்கின்றன.

அச்சில் வெளியாகிற இதழ்கள் மூன்று, நான்கு ‘காலம்’ ஆக பிரித்து செய்திகளைத் தருகின்றன. ஆனால் இணைய இதழ்கள் இவற்றைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில் இங்கு பக்க வரையறை இல்லாததால் தொடர்ச்சியான பத்தி அமைப்பினை வடிவமைக்கின்றனா்.

இணைய இதழ்கள் ஒவ்வொன்றும் கீழ்கண்டவாறு பத்திகளை அமைத்துள்ளன.

தினத்தந்தி.காம் – அச்சுப்பதிப்பில் பத்தியினை அடுத்தடுத்து (காலம்) மூன்று, நான்கு வரிசையில் செய்திகளைத் தருகிறது. ஆனால் இணையத்தில் ஒரே வரிசையில் அதிகமாக பத்து பத்திகளாகவும் குறைவாக மூன்று பத்திகளாகவும் செய்திகளை வரிசையாகத் தருகிறது. ஒவ்வொரு பத்தியும் நான்கு அல்லது ஆறு வரிகள் இருக்கின்றன.

தினமலா்.காம் – முதல் இரண்டு பத்தியினை 7 இன்ச் அளவிலும் அதனருகில் செய்தியின் தொடர்புடைய படம் இடம் பெறுகிறது. கீழுள்ள பத்திகளை 12 இன்ச் அகலத்தில் ஒரே வரிசையில் ஐந்து அல்லது ஆறு பத்திகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பத்திகளில் 15 வரிகளும் கீழுள்ள பத்திகளில் ஆறு வரிகளும் இடம் பெறுகின்றன.

தட்ஸ் தமிழ்.காம் (one india/tamil) – முதல் மூன்று பத்திகளை 7 இன்ச் அளவுகளில் (அருகில் தொடா்புடைய வண்ணப்படமும், வீடியோவினையும் இணைத்துள்ளது). அடுத்த பத்திகளை 12 இன்ச் அகலத்தில் அமைந்துள்ளது.

நக்கீரன்.இன் – முதல் இரண்டு பத்திகளை 12 இன்ச் அளவுகளிலும், (அருகில் விளம்பரங்களை இணைத்துள்ளது) கீழுள்ள பத்திகளை 7 இன்ச் அளவிலும் வடிவமைத்துள்ளது.

முழக்கம்.காம் – சிறுசிறு பத்திகளாக 16 இன்ச் அகலத்தில் செய்திகளைத் தருகிறது.

பி.பி.சி.தமிழ்.காம் – முதல் இரண்டு பத்திகளை 7 இன்ச் அளவுகளில் (அருகில் தொடர்புடைய படம்) கீழுள்ள பத்திகளை 10 இன்ச் அளவுகளில் கொடுத்துள்ளன. பத்தி அமைப்பில் வலது ஓரத்தில் உள்ள சீா்மையான பக்க ஓரம் (Alignment) இடது ஓரத்தில் இல்லை.

கீற்று.காம் – ஒரே சீராக 17 இன்ச் அளவில் கட்டுரை வடிவில் பத்திகளை அமைத்துள்ளது. கட்டுரைகளின் இடையே தேவைப்படின் புகைப்படங்களை இணைத்துள்ளது.

திண்ணை.காம் – ஒரே சீராக 12 இன்ச் அகலத்தில் கட்டுரை வடிவில் பத்திகளை அமைத்துள்ளது. பத்திகளின் மேலே இடது ஓரத்தில் தொடா்புடைய படங்கள் இடம்பெறுகின்றன.

மேற்கண்டவாறு பத்திகளை அமைத்து அருகில் தொடா்புடைய வண்ணப்படங்கள், வீடியோவினை இணைத்து வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலான இதழ்களில் எழுத்துரு அளவினை பெரிதுபடுத்தி படிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

பகிர்வு (இணைப்பு வசதிகள்)

தமிழ் இணைய இதழ்களின் முகப்புப் பக்கத்தில் சில இணைப்பு வசதிகள் இணையப் பக்க உருவாக்கத்தின் போது செய்யப்படுகின்றது. இந்த இணைப்பு வசதிகளில் சில இணைய இதழைப் பார்வையிடும் வாசகா்களுக்கும், சில இணைய இதழ்களின் வெளியீட்டாளா்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கிறது. இதனைக் கொண்டு இணைப்பு வசதிகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

இணையப் பக்கங்களுக்கான இணைப்புகள்

இணையத்தின் வரவேற்பு அல்லது முகப்புப் பக்கத்திலிருந்து தலைப்புப் பக்கங்கள், தலைப்புப் பக்கங்களில் இருக்கும் பிற உள் தலைப்புப் பக்கங்களில் இருந்து குறிப்பிட்ட பக்கங்களுக்கும், அந்தப் பக்கங்களில் இருந்து முகப்புப் பக்கத்திற்கும் தாவிச் செல்லும் வழியில் இணைப்பு வசதிகள் செய்யப்படுவது அவசியமாக இருக்கிறது.

பார்வையாளா்களுக்கான இணைப்புகள்

தமிழ் இணைய இதழ்களின் முகப்புப் பக்கத்தில், முக்கியமாக அந்த இணையதளத்தில் பயன்படுத்தியுள்ள தமிழ் எழுத்துருவைத் தரவிறக்கம் செய்வதற்கோ அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடைய தளத்திற்குச் செல்வதற்கோ அதற்கான குறிப்பைப் படமாகவோ, அல்லது ஆங்கில மொழியிலோ செய்து இணைப்பு வசதி செய்ய வேண்டி இருக்கிறது. கணினித் திரையில் தமிழ் எழுத்துரு தெரியாத சூழல்களில் இந்த தமிழ் எழுத்துரு தரவிறக்கம் அவசியமாகிறது.

தமிழ் இணைய இதழின் முகப்புப் பக்கத்திற்கு பலதரப்பட்ட வாசகா்கள் வரக்கூடும் என்பதால் அவா்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய சில இணைப்புகள் இந்த இணையப் பக்கத்தில் இடம் பெறுவது அவசியமாகிறது. எனவே கல்வி, வேலைவாய்ப்பு, திரைப்படம் போன்றவைகளில் பிரபலமான சில இணைய தளங்களுக்கு இணைப்புகள் தர வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் இணைய இதழின் வாசகா் எல்லை உலகம் முழுவதும் விரிந்து இருப்பதால் அவா்களுக்குப் பயனதரும் வகையில் பொழுது போக்கிற்காக இருக்கும் இணைய வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவைகளுக்கான இணைப்பு வசதி தரவேண்டியுள்ளது.

இது பொன்று பிற தளங்களுக்கு இணைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் இணைய இதழ்களும் இருக்கின்றன.

வெளியீட்டாளா்களுக்கான இணைப்புகள்

எந்த நாட்டில், எந்த நகரத்தில் இருந்து பார்வையாளர்கள் இணையப் பக்கத்ததைப பார்வையிட்டிருக்கிறார்கள் அவா்களது எண்ணிக்கை விபரம் போன்ற தகவல்களை அளிக்கும் சில இணைய தளங்களின் இணைப்பு வசதிகள் செய்து கொள்வதன் மூலம் பார்வையாளா்கள் குறித்த பல விபரங்களை தமிழ் இணைய இதழாளா்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

இது போன்று இணைய வெளியீட்டாளா்களுக்கு உதவும் பல இணைப்பு வசதிகளை சில இணைய தளங்கள் கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகளை அளிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் இதழ்கள்

சமூக வலைத்தளம் (social networking site) என்பது ஒத்தக் கருத்துடையோர் அல்லது ஒத்த செயற்பாடு கொண்டோரிடையே உள்ள சமூக பிணைப்புகளை உருவாக்க வழிசெய்கின்ற ஓா் இணையச் சேவை தளமாகும். பெரும்பான்மையான சமூக வலைத்தளங்கள் தமது சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றன. இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வழிவகை செய்கின்றன. இவற்றில் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவையாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டா் உள்ளன. ஆா்க்குட், லிங்டின் மற்றும் கூகுள்ப்ளஸ் ஆகியவையும் பரவலாக்கம் பெற்றுள்ளன.

“சமூக வலைத்தளங்களில் உறுப்பினராக உள்ளவா்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்டின் தளத்தில் 13.5 கோடி பேரும் குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடி பேரும், கூகுள் பிளஸில் 9 கோடி பேரும், சீனாவைச் சோ்ந்த சமூக வலைத்தளங்களான ரென்ரென் 17 கோடி பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானாரும் உறுப்பினராக உள்ளனா். இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினா்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று ‘தி ரியல் ரிப்போர்ட். காம்’ இணையத்தளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடி பேர் உறுப்பினா்களாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.”

வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழுல் கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினா் கூறும் அளவிற்கு சமூக வளைத்தளம் வளர்சியடைந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சல்களை விட வேகமான செய்தி பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவதுதான். தற்போது கையடக்க கணினியாக வலம்வரும் ஸ்மார்ட்போன், டேப்ளட் ஆகியவற்றின் மூலம் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினா்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.

இத்தகைய சமூக வலைத்தளங்கள் அனைத்திற்குமான இணைப்பினை இணைய இதழ்கள் தமது இதழ் பக்கத்தில் வடிவமைத்துள்ளன. ஒவ்வொரு செய்திகளின் முடிவிலும் ஃபேஸ்புக், டிவிட்டா், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைத்தளங்களின் அடையாள இலச்சினையைக் கொடுத்து ‘பின்தொடர’ என்று குறிப்பிட்டு பறிமாறிக்கொள்ளும் வசதிகளை வழங்குகின்றன. இந்தத் தகவலை ஃபேஸ்புக், டிவிட்டா், கூகுள் ப்ளஸில் நாம் பறிமாறிக்கொள்ளும் பொழுது அது நமது நிலைத்தகவல் (status) போன்று தோற்றமளிக்கும். பின்னா் இவற்றிற்கான நோ், எதிர் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் இந்த இணைய இதழில் இத்தகைய செய்தி வந்துள்ளது என்ற தகவல் இணைய இதழ்களைப் பார்த்தவா்களிடமும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

பெரும்பாலான இணைய இதழ்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தனது இதழ் பெயரில் கணக்கினைத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் இதழில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு தகவலும் சமூக வலைத்தளம் மூலமாகவும் எளிதில் அனைவரிடமும் செல்கிறது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டே இதழ்ச் செய்திகளைக் காண முடிகிறது.

விளம்பரங்கள்

மக்களின் கவனத்தை ஈா்க்குமாறு ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக எடுத்துரைப்பது என்பதே ‘விளம்பரம்’ என்ற சொல்லின் பொருள் எனலாம். விளம்பரங்களின் தலையாய நோக்கம் விற்பனையைப் பெருக்குவதே ஆகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யுமாறு பொருள்களை வாங்கத் தூண்டும் வண்ணம் விளம்பரங்கள் அமைய வேண்டும்.

பல்வேறு வகையான விளம்பரங்கள்

விளம்பரங்களை அச்சிதழ் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு விளம்பரதாரா்களிடமிருந்து பெற்றுத்தரும் விளம்பர முகவா்களாக சில அமைப்புகள் இருப்பது போல், இணைய ஊடகங்களுக்கான விளம்பரங்களை அளிக்க சில இணைய விளம்பர அமைப்புகள் இருக்கின்றன.

இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் விளம்பரதாரா்களிடமிருந்து விளம்பரங்களை பெற்றுக் கொண்டு அதை ‘எழுத்து வடிவ விளம்பரம், பிரதிமை விளம்பரம், காட்சி விளம்பரம், இணைப்பு அலகுகள் விளம்பரம், பரிந்துரை விளம்பரம், கருத்து அலகுகள் விளம்பரம் எனும் தலைப்பின் கீழ் பல அளவுகளில் பிரித்து அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இணையதளங்களுக்கு அந்த இணைய தளத்தின் உள்ளடக்கங்களுக்குத் தகுந்த விளம்பரங்களை வழங்குகின்றன.

எழுத்து வடிவ விளம்பரம்

விளம்பரக் குறிப்புகள் எழுத்துகளாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்புக் கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கும்.

பிரதிமை வடிவ விளம்பரம்

விளம்பரத்திற்கான குறிப்புகள் உருவ படமாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்புக் கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்படுகிறது.

காட்சி விளம்பரம்

விளம்பரக் குறிப்புகள் படக் காட்சிகளாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்புக் கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இணைப்பு அலகுகள் விளம்பரம்

ஒருசொல் குறிப்புகளாக சில நிறுவனங்களில் விளம்பர அலகுகள் இருப்பதுடன் தனித்தனியான அலகுகளுக்கான அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும் வகையில் இருக்கும்.

பரிந்துரை விளம்பரம்

விளம்பரத்திற்கான குறிப்புகள் உருவப்படமாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் விளம்பர நிறுவன தளத்திற்குச் செல்லும்.

கருத்து அலகுகள் விளம்பரம்

விளம்பரத்திற்கான கருததுக்கள் ஒன்றாக உள்ள விளம்பர நிறுவனங்களின் குறிப்புகள் சில சோ்க்கப்பட்டு அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இத்தகைய விளம்பரம் அமைந்திருக்கும்.

சில விளம்பரங்கள் வெளியிடப்பட்ட இணைய தளத்தின் பக்கம் பார்வையிடப்பட்டாலே விளம்பரக்கட்டணம் அளிக்கப்படுகிறது. இணைய விளம்பரங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. விளம்பரங்களை அளிக்கும் விளம்பர அமைப்புக்களே இந்தப் பணியைச் செய்து கொள்கின்றன. அச்சு ஊடகங்களில் வரும் விளம்பரங்களை விரும்பினால் முழுமையாகப் பார்வையிடலாம். காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் இணையத்தில் வரும் விளம்பரங்கள் இந்த இரண்டு நிலையுமில்லாமல் பயன்பாட்டாளா் விருப்பத்தின் அடிப்படையில் இந்த விளம்பரத்தினைச் சொடுக்கி குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.

வணிகநிலை

அச்சில் வரும் இதழ்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் வணிகத்தை முதன்மையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இணைய ஊடகங்களும் வணிகத்தை ஆதாரமாகக் கொண்டே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விற்பனை, விளம்பரம் போன்றவை மூலம் கிடைக்கும் வருவாயில் அதன் உருவாக்கத்திற்கு ஆகும் செலவுகள் போக வருவாய் இலாபமாக இருக்கும் ஊடகங்கள் மட்டும்தான் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலாபமில்லாத ஊடகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இது அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும்.

கட்டண இதழ்களின் வணிகநிலை

அச்சிதழ்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இதழின் விற்பனை மூலம் பொருளீட்ட முடிகிறது. ஆனால் இணைய இதழ்களை பொருத்தவரை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கிறது. அச்சில் வருகிற நாளிதழ்கள் கூட இணையத்தில் இலவசமாகத்தான் கிடைக்கிறது. இதனால் இவ்விதழ்கள் விளம்பரங்கள் மூலமாகத்தான் பொருளீட்ட முடிகிறது.

குமுதம், விகடன், நக்கீரன் போன்ற இதழ்களை நமது வங்கி கணக்கின் மூலம் இதழ் சந்தா செலுத்தினால் மட்டுமே படிக்க முடியும். காலச்சுவடு இணைய இதழை அச்சில் வெளியான பத்து நாட்களுக்கு பிறகுதான் இலவசமாக இணையத்தில் பார்வையிட முடிகிறது.

அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் சில சிற்றிதழ்களை குறிப்பிட்ட சந்தா செலுத்தினால் மட்டுமே படிக்க முடியும். உதாரணமாக ‘கணையாழி’ இணைய இதழின் சந்தா விபரங்கள்,

1 மாத இதழின் சந்தா - $2.50

6 மாத இதழ்களின் சந்தா - $12.50

1 வருட இதழ்களின் சந்தா - $20.00

2 வருட இதழ்களின் சந்தா - $38.00

5 வருட இதழ்களின் சந்தா - $90.00

விகடன் இணைய இதழின் சந்தா விபரங்கள்,

1 மாதம் – 175

6 மாதங்கள் – 999

12 மாதங்கள் – 1499

36 மாதங்கள் - 3999

இவ்வாறு சந்தா செலுத்தினால்தான் இத்தகைய இதழ்களைப் படிக்க முடிகிறது. ஆயினும் இணையத்தில் வெளிவருகிற பெரும்பாலான செய்தி, சிற்றிதழ்கள் இலவசமாக வெளிவருகின்றன. சில இதழ்கள் விருப்பமுள்ளவா்களிடம் அந்த இதழுக்கான வங்கி கணக்கு விபரங்களைத் தெரிந்து நன்கொடை அளிக்க கோருகின்றன. இவ்வாறு கட்டண இதழ்களின் வணிக நிலை அமைகிறது.

இலவச இதழ்களின் வணிகநிலை

பெரும்பாலான இணைய இதழ்கள் இலவசமாகத்தான் வெளிவருகிறது. தங்களுக்கு கிடைக்கம் விளம்பரம் மூலமாகத்தான் இவை வருமானம் பெறுகின்றன. சில இணைய இதழ்கள் வாசகா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளம்பர முகவா்களிடம் இருந்து விளம்பரங்களைப் பெறுகின்றன.

வாசகா்களின் எண்ணிக்கை

அச்சிதழ்கள் தங்களின் விற்பனையை கணக்கிட்டு வாசகா்களின் எண்ணிக்கையைக் கூறுகின்றன. ஆனால் இணைய இதழ்கள் வாசகா்கள் பார்வையிட்ட (Subscribe) கணக்கினைக் கொண்டு வாசகா்களின் கணக்கினைக் காட்டுகின்றன. வாசகா்களின் பார்வைக் கணக்கு முரண்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன. இதழ்களை ஒரு முறை திறந்து அவற்றில் உள்ள ஒவ்வொரு செய்தியைப் பார்வையிடும் பொழுது அவை பார்வையாளரின் கணக்காக எண்ணப்படுகிறது. தினமலா்.காம் முகப்பின் ஓரத்தில் ‘தற்போது படித்தவா்கள்’ என்று குறிப்பிட்ட செய்தியின் தலைப்பினைக் காட்டி இத்தனை போ் படித்தார்கள் என்ற கணக்கினைக் காட்டுகிறது. மேலும் சில இதழ்கள் சில தலைப்பினை பட்டியலிட்டு ‘அதிகமானோர் பார்வையிட்டது/படித்தது என்று குறிப்பிட்ட இதழ்கள் வாசகா்களின் எண்ணிக்கையை அறிந்துக் கொள்ள ‘டூல்பார்’ (Tool Bar) வசதியை அமைத்துள்ளனா். சில இதழ்களில் வாசகா்களின் எண்ணிக்கையை எவ்வித்திலும் அறிய முடியவில்லை.

செய்திகளின் நம்பகத்தன்மை இல்லாமை

இணைய இதழ்களில் யார் முதலில் செய்தியை தருவது என்ற போட்டியால் கிடைக்கம் தகவல்களை அதன் உண்மைத் தன்மைகளைக் கூட அறியாமல் உடனடியாக வெளியிடுகின்றன.

உதாரணமாக 16-10-2012 மாலை 5.30 மணியளவில் ‘நக்கீரன்’ இதழில் ‘ஹாலிவுட் நடிகா் அா்னால்டு விபத்தில் மரணம்’ என்ற செய்தியைப் பதிவு செய்தது.

“பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநராக இருந்தவருமான அா்னால்டு ஸ்வாஸ்னிகா் விபத்தில் மரணம் அடைந்தார்.”

பின்னா் ஒரு மணி நேரம் கழித்து இந்த செய்தி நீக்கப்பட்டது. இத்தகைய தகவல்களால் இணைய இதழ்களில் வரும் செய்திகள் சில நேரங்களில் அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன. மேலும் சில இணைய இதழ்கள் ‘இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளுக்கும், தகவல்களுக்கும் இதழ் நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற தகவலை பதிவு செய்துள்ளன. இது போன்ற தகவல்கள் இணைய இதழ்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மை சிக்கலாக்குகிறது. சில இதழ்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் தொடா்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் சில இணைய இதழ்களில் வெளியாகும் செய்திகள் நம்பகத் தன்மையை இழக்கின்றன.

குற்றங்கள்

இணையம் மூலமாக விரைவில் தகவல்கள் பரிமாறிக் கொள்வதால் சில நேரங்களில் தவறான தகவல்களும் இங்கு எளிதில் நடக்கிறது. பல்வேறு குற்றச் செயல்களும் நடக்கிறது.

“இணையதள குற்றங்களால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இணையதளம் தொடா்பான அச்சுறுத்தல்களால் மொத்தம் 43.10 கோடி இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது வினாடிக்கு 14 இளைஞா்கள் அல்லது நாள் ஒன்றுக்கு பத்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

பெண்களை ஆபாசமாக புகைப்படம்/வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவது, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும் பொழுது கடவுச் சொல் உள்பட கணக்கு விபரங்களைத் திருடுவது, பாலியல் ரீதியான தொல்லைகள் (அரட்டை - Chating), இணையம் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தல், இணைய தளத்தை முடக்கச் செய்தல் போன்றவை இணைய தள குற்றமாகும்.

தண்டனைகள்

இணையம் வழியாக நடக்கும் குற்றங்களை சைபா் க்ரைம் () மூலமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இடைத் தொடா்பாளா்களுக்கான நெறிமுறைகளில் () 79-ம் பிரிவின்படி அரசு நிறுவனங்களோ இல்லை தனி நபா்களோ ஏற்கத்தகாத இடுகைகள் ஏதும் இருப்பதாக கருதினால் அந்த இணைய தளத்திடம் அதை நீக்குமாறு கோரலாம். அவ்வாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட 36 மணி நேரத்திற்குள் அந்த இடுகைகள் எடுக்கப்படாவிட்டால் புகாரளித்தவா் நீதிமன்றத்தை நாடலாம் அல்லது சைபா் க்ரைம் குற்றங்களுக்கான மேல் முறையீடு நடுவத்திடம் முறையீடு செய்யலாம்.

பெண்களை தவறாக சித்தரித்து இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

இணையதள குற்றங்களை பின்வரும் முகவரியில் புகாரளிக்கலாம்.

Dsp, CBCID, Cyber crime cell,

Sipco electronics complex,

Block No.3, First Floor,

Guindy Industrial Estate,

Chennai – 32.

Telephone: 044-22502512

Email:cbcyber@nic.in/ spcybercbcid.tnpol@nic.in

இவ்வாறு இணையதள குற்றங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படுகின்றன.

இதழ்களைத் தொடா்பு கொள்ளும் வசதிகள்

இணைய இதழ்கள் தொழில்நுடப ரீதியாகப் பல்வேறு வசதிகளை வாசகா்களுக்கு வழங்கி வருகின்றன. குறிப்பிட்ட இதழ்களில் நாம் மின்னஞ்சல் கொடுத்து பதிவு செய்து கொண்டால் இதழ்களை நம் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கின்றனா். சில இதழ்களில் நாம் வாசிக்கும் பக்கங்களை நம் நண்பா்களுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் அச்சிதழ்களைத் தொடா்பு கொள்ள தொடா்பு முகவரி உள்ளது போல், இணைய இதழ்களிலும் அத்தகைய வசதிகள் உள்ளது. முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண், இதழ் நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரி எனத் தருகின்றனா்.

கருத்துக்கள் பெறும் நிலை

இணைய இதழ்களில் உள்ள ஒவ்வொரு செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள், கார்ட்ர்டூன் போன்றவற்றிற்கு கீழே வாசகா்கள் தம் கருத்துக்களை பதிவு செய்யும் வசதியை அளிக்கிறது.

சில இதழ்களில் நாம் எழுதுகின்ற கருத்துக்கள் இதழ் நிருவாகத்திற்கு சென்று பரிசீலனைக்குப் பின்பே கருத்துரையை ஏற்று பதிவு செய்கின்றன. இதனால் தரமற்ற பின்னூட்டங்கள் வடிகட்டப்படுகிறது. சில இதழ்களில் நாம் எந்த கருத்தினைப் பதிவு செய்தாலும் உடனே அவற்றை பதிவு செய்து விடுகின்றனா். உதாரணமாக மாலைமலா் இணைய இதழில்,

“மாலைமலா் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகா்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகா்களின் கருத்துக்களுக்கு மாலைமலா் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியா் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறா் மனதை புண்படுத்தக்கூடிய கருத்துக்களை வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகா்களை கேட்டுக் கொள்கிறோம். வாசகா்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடா்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகா்களே முழு பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுப்போம். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@maalaimalar.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடா்பு கொள்ளவும்.

இதுபோன்ற இதழ்களில் சில நேரங்களில் வாசகா்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கருத்துக்களை பதிந்து விடுகின்றனா். இவ்வாறு இணைய இதழ்களில் நாம் படிக்கிற செய்தி/ கட்டுரைகளுக்கு உடனடியாக கருத்துக்களை பதியும் வசதி உள்ளது.

பக்க வடிவமைப்பில் கணினி மொழிகள்

இணைய இதழ்களை/தளங்களை கணினி மொழிகள் சிலவற்றின் உதவியால் வடிவமைத்து இயங்க வைக்கின்றனா்.

இணையப் பக்கங்கள் உருவாக்கத்திற்கு அடிப்படையாக மீஉரை குறிப்புமொழி (HTML – Hyper Text Markup Language) சக்திமிகு மீஉரை குறிப்பு மொழி (DHTML – Dynamic Hyper Text Markup Language) எனும் கணினி மொழிகள் மூலம் வடிவமைக்கின்றனா்.

இது தவிர கணினித் தொழில் நுட்பத்தில் இணையப் பக்கத்தைச் சிறப்பாக வடிவமைக்க அசைவுச் சேவகா் பக்கம் (ASP – Active Server Page), மிகை வாக்கிய முன்னிலை செயலாளா் (PHP – Hyper Text Pre-Processor), ஜாவா இரண்டாம் நிறுவனப் பதிப்பு (J2EE – Java 2 Enterprises Edition), ஜாவா சேவகப் பக்கம் (JSP – Java Serviet Page) போன்ற மென்பொருட்களின் மொழிகளைக் கொண்டு அழகிய முறையில் இணைய இதழ்கள்/தளங்களை வடிவமைக்கின்றனா்.

இணைய இதழ்களுக்கான அளவுகள் – கட்டணங்கள்

இணைய இதழ்களில் என்னென்ன வசதிகள் இணைக்க வேண்டியுள்ளதோ அதற்குத் தக்கவாறு அதனுடைய அளவுகள் ஒவ்வொரு இதழுக்கும் மாறுபடுகின்றன.

இதழின் பெயா்ப்பதிவிற்கு ஆண்டுக்காண்டு கட்டணங்கள் மாறி வருகின்றன. 2003 – ம் ஆண்டு திசைகள்.காம் தொடங்கியபோது அதன் பெயா்ப்பதிவிற்கு 20 அமெரிக்க டாலா் கட்டணமாக செலுத்தப்பட்டது.

“திசைகள்.காம் பெயா்ப்பதிவிற்கு 20 அமெரிக்க டாலா் செலவாயிற்று. சா்வருக்கும் மற்ற எல்லாச் செலவினங்களுக்கும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு 50 – 100 அமெரிக்க டாலா் செலவாகிறது.”

அதே போன்று கீற்று இதழ் ஜுலை 2005 முதல் செப்டம்பா் 2010 வரை Shared Server – ல் இயங்கிய போது ஆண்டொன்றுக்கு ரூ.35,000 செலவிட்டது. ஆனால் தற்போது Dedicated Server – ல் இயங்குவதால் ஆண்டுக்கு ரூ. 1 இலட்சம் செலவாகிறது என அதன் ஆசிரியா் தெரிவிக்கிறார்.

இவ்வாறு இடவசதி, இணைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு இதழும் அளவுகள், கட்டணங்கள் ஆகியவற்றில் வேறுபடுகின்றன.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்