புள்ளியியல் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்தா சந்திர மகலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஜூன் 29 அன்று தேசிய அளவில் புள்ளியியல் தினத்தைக் (Statistics Day) கொண்டாடுகிறது. புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம், நாட்டின் வளர்ச்சிக்கான சமூக பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பதில் புள்ளி விவரங்களின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். 2007-ம் ஆண்டு முதல் புள்ளியியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் தற்கால தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. 2025 கொண்டாட்டம் 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "தேசிய மாதிரி ஆய்வின் 75 ஆண்டுகள்" என்பதாகும். இந்தியாவில் ஆதார அடிப்படையிலான முடிவெடுத்தல் மற்றும் நிர்வாகத்துக்கு உதவும் நம்பகமான மற்றும் சரியான தரவுகளை வழங்கும் தேசிய மாதிரி ஆய்வின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு கருப்பொருள் அமைந்துள்ளது. புள்ளிவிவரத் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்ததற்காக ஐஐஎம் கொல்கத்தாவின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரஜாமித்ர பூயனுக்கு புள்ளியியல் துறையில் சிறந்த பணிகளுக்காக 2025-ம் ஆண்டிற்கான பேராசிரியர் சி.ஆர். ராவ் தேசிய விருது வழங்கப்பட்டது. ஜிஓஐ ஸ்டாட்ஸ் மொபைல் செயலி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், புள்ளியியல் தினத்தன்று ஜிஓஐ ஸ்டாட்ஸ் (GoIStats) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி அனைத்து மக்களுக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை எளிதில் அணுகுவதற்கான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். ஜிஓஐ ஸ்டாட்ஸ் மொபைல் செயலியானது அனைத்தையும் உள்ளடக்கிய தரவு சூழல் அமைப்பை உருவாக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இந்த செயலியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு தரவு உள்ளிட்ட முக்கியமான சமூக-பொருளாதார அம்சங்களை விளக்கும் தகவல் பலகை உள்ளது. இந்த மொபைல் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. GoIStat mobile App நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த தகவல்கள் அறிக்கை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்