காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி சேர்க்கை தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாணவர்களுக்காக நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை மற்றும் கிண்டி ஆகிய 03 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிரத்யேகமாக Fitter (Deaf and Dumb) என்ற தொழிற்பிரிவு இயங்கி வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 5% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 2026-27ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்களுக்கான நேரடி சேர்க்கை 31.08.2026 வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில். மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 07.09.2026 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1000/-, மிதிவண்டி. சீருடையுடன் கூடிய தையற் கூலி, காலணி, வரைபடக் கருவி, பாடப் புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த உடன் முன்னணி நிறுவனங்களின் வளாக நேர்காணல் மூலம் (Campus Interview) வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-ஐ பணமாகவோ, மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் விரும்பும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் மற்றும் WhatsApp எண்: 94990 55612, 94990 55642 ஆணையர்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9